சர்கார் பட கதை விவகாரத்தில் வழக்கு தொடர்ந்த வருணுடன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சமரசம்.....
AR முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'சர்கார்'. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
துப்பாக்கி, கத்தி திரைப்படத்திற்கு அடுத்து மூன்றாவது முறையாக நடிகர் விஜய் மற்றும் AR முருகதாஸ் இப்படத்தில் இணைந்துள்ளனர். நடிகர் விஜய்-ன் 62-வது திரைப்படமான இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்துக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வருண் என்ற ராஜேந்திரன் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் “செங்கோல் என்ற தலைப்பில் நான் எழுதிய கதையைத் திருடி சர்கார் என்ற தலைப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படமாக்கியுள்ளார். இந்தக் கதையை ஏற்கெனவே நான் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் முறைப்படி பதிவு செய்துள்ளேன். எனவே இந்தப் படத்தின் கரு மற்றும் கதை என்னுடையது என்பதால் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, சர்கார் படத்துக்கு தடைகோரி யாராவது வழக்கு தொடர்ந்தால் தங்களது தரப்பையும் அழைத்து விசாரிக்க வேண்டும் எனவும் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை கடந்த 26-ம் தேதி விசாரணை செய்த நீதிபதி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் மற்றும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் வரும் 30-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், அதுவரை படத்தை வெளியிட தடைவிதிக்க முடியாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து, இன்று காலை மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் பாக்யராஜ் நேரில் வந்திருந்தனர். இந்த வழக்கில் சன் பிக்சர்ஸ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், செங்கோல் கதையின் கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமரசம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.
அதே நேரத்தில் மனுதாரர் தரப்பில் ஆஜராக வேண்டிய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அடுத்த 1 மணி நேரத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் உடனான சமரசத்தை வருண் என்கிற ராஜேந்திரன் ஏற்றுக் கொள்கிறாரா என்பது தெரிய வரும். அதைப் பொறுத்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதியில் 'சர்கார்' படம் வருண் ராஜேந்திரனின் கதை தான் என்று ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், சர்கார் படம் திரையிடும் போது, வருண் ராஜேந்திரன் பெயர் போட்டு நன்றி தெரிவிக்கப்படும் என ஏ.ஆர்.முருகதாஸ் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
மேலும், வருண் ராஜேந்திரன் ரூ.30 லட்சம் இழப்பீடு கேட்க, குறிப்பிட்ட தொகையும் வழங்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சர்கார் படத்தை வெளியிட தடையில்லை என கூறி நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.