வடகிழக்கு பருவ மழையினால் கிடைத்துள்ள நீரை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்!
பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்த கையேட்டை வெளியிட்ட பின்னர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அப்போது அவர் தெரிவிக்கையில்., பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். புயல் பாதிக்கும் 4,399 இடங்களில் மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
மருத்துவமனைகளில் தேவையான உயிர்காக்கும் இயந்திரங்கள் தயார் நிலை உள்ளது. மருத்துவமனைகளுக்கு தேவையான மின் வசதிகளும் செய்து தரப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டெல்டா பகுதிகளில் நிரந்தர புயல் பாதிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எண்ணெய் நிறுவனங்கள் போதுமான அளவு ஸ்டாக்குகளை தேக்கி வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தில் கால்நடைகள் மீட்பதற்கு 8624 மீட்பாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என குறிப்பிட்டார்.
மேலும், ஏரிகளை தூர்வாருதல், நீர்நிலைகளை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்த அவர், இந்தாண்டு மழையினால் கிடைக்கும் நீரை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக ஏற்பட்ட இயற்கை பேரிடர்களில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை செயல்பாட்டுக்கு உலகளாவிய அளவில் பாராட்டு கிடைத்துள்ளது எனவும் பெருமை தெரிவித்தார்.