'கனிமொழிக்கு வாழ்த்துகள்...ஆனால்' - தமிழிசை கடும் விமர்சனம்

தலைவர் அண்ணன், துணை பொதுச்செயலாளர் தங்கை என வாரிசு அரசியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என பொதுமக்கள் எண்ணும் நிலை உள்ளதாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 9, 2022, 04:04 PM IST
  • திமுக தலைவராக ஸ்டாலின் மீண்டும் தேர்வு
  • கனிமொழி திமுக துணை பொதுச்செயலாளராக தேர்வு
  • ராஜராஜனின் அடையாளத்தை மறைக்க முயற்சி - தமிழிசை
'கனிமொழிக்கு வாழ்த்துகள்...ஆனால்' - தமிழிசை கடும் விமர்சனம் title=

சென்னை தரமணியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற உலக கராத்தா மாஸ்டர்ஸ் சங்கம் சார்பில் 2022ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவில் தெலங்கான மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். விருதுகளை வென்றவர்கள் அவர் விருது வழங்கி சிறப்பு செய்தார்.

நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், "குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுக்க வேண்டும். பள்ளி பாட நூல்களிலும் தற்காப்பு கலை குறித்து தகவல்கள் இடம்பெற வேண்டும். ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் என அனைவரும் நிறைய சவால்களை சந்திக்கிறார்கள். குழந்தைகளுக்கு தடுப்பு தற்காப்பு கலைகளை சொல்லிக் கொடுப்பதன் மூலம் பல தற்கொலை முயற்சிகள் தவிர்க்கப்படும். அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்" என்றார். 

'காவியில் திருவள்ளுவர்...'

புதுச்சேரி மின்சாரத்துறை ஊழியர்கள் போராட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,"மக்களுக்கு பயன் இல்லாத எந்த நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளாது. அரசின் இந்த நடவடிக்கையால் மின்கட்டணம் குறையும், மின் திருட்டு தடுக்கப்படும், மின் கருவிகள் எல்லாம் புதிதாக மாற்றப்படும். பல துணைநிலை மாநிலங்களில் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக நடந்து வருகிறது. அங்கே மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இது தனியாருக்கு லாபம் கொடுப்பதற்கான நடவடிக்கை அல்ல. மின்சார ஊழியர்களின் வேலைக்கு எந்த பாதிப்பும் வராது" என்றார். 

மேலும் படிக்க | வள்ளுவம் வாழ்வியலுக்கானது - ஆளுநருக்கு எதிராக வைரமுத்து ட்வீட்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி திருக்குறள் குறித்து பேசியது தொடர்பான கேள்விக்கு,"திருக்குறள், திருவள்ளுவர் குறித்து பலரிடம் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. திருவள்ளுவர் காவியுடன் இணைந்து இருக்கிறார், ருத்ராட்சை கொட்டை அணிந்து இருக்கிறார் என்பதெல்லாம் பழைய படங்கள். திருக்குறள் குறித்து ஆராய்ச்சி செய்யலாம். 

'ராஜராஜ சோழனின் அடையாளத்தை மறைக்க முயற்சி'

ஆர்.என். ரவி இந்த மாநிலத்தின் ஆளுநர் என்ற முறையில் சில கருத்துக்களை முன் வைக்கிறார். அது அவரின் தனிப்பட்ட கருத்து. அவர் மறைக்கப்பட்ட அடையாளங்களை மீட்டெடுக்கலாம் என்று கூட நினைக்கலாம் இல்லையா... தற்போது ராஜராஜ சோழனின் அடையாளமே மறைக்கப்படுவதற்கான முயற்சிகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. பிறரின் நம்பிக்கையை மதிக்க வேண்டும். தான் சொல்வது தான் சரி, பிறர் சொல்வது தவறு என்று எடுத்துக் கொள்ளக்கூடாது" என்று பதிலளித்தார்.

திப்பு விரைவு ரயில், உடையார் விரைவு ரயில் என பெயர் மாற்றப்பட்டது குறித்த கேட்டதற்கு,"எங்கள் எல்லா திட்டமும் மக்களுக்கானது தான்" என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். திமுக துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து,"ஒரு பெண் பதவிக்கு வருவது சிரமமான காரியம்தான், அதற்கு எனது பாராட்டுக்கள். அண்ணன் தலைவர், தங்கை துணை பொதுச்செயலாளர் என வாரிசு அரசியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என பொதுமக்கள் எண்ணும் நிலை உள்ளது. யார் எப்படி இருந்தாலும் ஒரு பெண் பதவிக்கு வந்துள்ளதற்கு எனது வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். 

மேலும் படிக்க | திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு; கனிமொழி துணை பொதுச்செயலாளர்... உடன் பிறப்புகள் உற்சாகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News