பாகிஸ்தானில் இந்திய விமானப்படை வீரர்கள் நடத்திய தாக்குதலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய கார் CRPF வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த துயர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசும் கூறியிருந்தது. எனவே, சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்று எல்லைப்பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் தொடங்கி உள்ளது. இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இந்திய விமானப்படை விமானங்கள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து குண்டுகளை வீசின. சுமார் 1000 கிலோ எடை கொண்ட குண்டுகள் வீசப்பட்டதில், பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
உலகத்தை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை வேரோடு அழிப்பதற்கான நடவடிக்கைகளில் பிரதமர் மோடி பல வெற்றிகளை பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் துணிச்சல் மிக்க செயல்பாட்டின் காரணமாக வெற்றிகரமான விமானப்படை தாக்குதல் நடத்தப்படுள்ளதாக கூறியுள்ள அவர், பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதற்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாக அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.