சென்னை: தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு (10th Class) பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் (K A Sengottaiyan) அறிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. மேலும் தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்த அரசு தரப்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தேர்வு எழுத வரும் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு வார வாய்ப்பு உள்ளது.
எனவே தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் இல்லை என்ற நிலையில் வரும் வரை மாணவர்களின் நலனை கருதி பொதுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும். அதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால், தமிழகத்தில் பொதுத்தேர்வு நடைபெருமா? என்ற சந்தேகம் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு (10th Class) பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் (K A Sengottaiyan) நேற்று அறிவித்தார். இதனையடுத்து, அவர் இன்று தனது சமூக வலைதளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தேர்வு எழுத தேர்வு மையத்திற்கு வரும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கு பேருந்து வசதிகள் செய்துத்தரப்படும் என தெரிவித்துள்ளார்.
அதாவது அவர் கூறியதாவது, "தேர்வு மையத்திற்கு வருகின்ற மாணவர்கள் எந்தப்பகுதியில் இருந்தாலும் அவர்களை அழைத்து வருவதற்கும், தேர்வு முடிந்த பிறகு மீண்டும் அந்தந்த பகுதிகளில் சென்று விடுவதற்கும் பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் (Students) சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதற்கான ஏற்பாடுகள் வகுப்பறைகளில் செய்யபட்டிருக்கிறது. மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டு தேர்வுக்கு வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் எனப் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் முதல் வாரத்திற்குள் +2, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். ஆனால் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால், பள்ளிகள், கல்லூரிகள் உட்பட கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் மூடப்பட்டது. ஏனென்றால் அன்று முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. மே 17 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளது. இதன் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு ஓரிரு தேர்வுகள் மட்டுமே பாக்கியிருந்ததால் அவை நடத்தி முடிக்கப்பட்டது. 10 ஆம் வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டன. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படும் என பரவலாக பேசப்பட்டது.
ஆனால், அரசோ அனைத்திற்கும் 10 ஆம் வகுப்பு தேர்வு அடித்தளம் என்பதால் நிச்சயம் தேர்வுகள் நடத்தப்படும் என்று கூறி வந்தது. இந்த நிலையில் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தெரிவித்துள்ளார். 12 ஆம் தேதி வரை தேர்வுகள் நடக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல மார்ச் 24 ஆம் தேதி +2 தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு ஜூன் 4-ல் தேர்வு நடத்தப்படும். 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் மே 27 ஆம் தேதி தொடங்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.