சென்னை: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை ஆவணப்படுத்தும் புத்தகத்தை வெளியிடுவதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வந்தடைந்தார். அப்பொழுது நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, மோடி ஜி ஜம்மு-காஷ்மீரை 370 வது பிரிவில் இருந்து விடுவித்துள்ளார். இப்போது பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று நான் நம்புகிறேன். 370 வது பிரிவு நீக்கப்பட்ட பின்னர், இனி ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சி இருக்கும் என்று அவர் கூறினார்.
புத்தகம் வெளியிட்ட பிறகு விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 370 வது பிரிவை நீக்குவது குறித்து, 'ஒரு உள்துறை அமைச்சராக, என்ன நடக்கும் என்பதில் நான் சிறிதும் தயங்கவில்லை. ஏனெனில் அது புதிய காஷ்மீரை உருவாக்கும். ஆனால் மாநிலங்களவையில் என்ன நடக்கமோ? என்று நான் அஞ்சினேன். ஆனால் வெங்கையா நாயுடு ஜி காரணமாகவே அனைவரும் அதை ஆதரித்தனர். காஷ்மீரில் இருந்து பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று நான் நம்புகிறேன். தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஆசை. விரைவில் தமிழ் கற்றுக்கொண்டு பேசுவேன். தமிழில் பேசமுடியாததற்க்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் கூறினார்.
அதேமேடையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு மிகப் பெரிய ஆன்மிகவாதி. அவர் தவறுதலாக அரசியலுக்கு வந்து விட்டார். மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர் வெங்கைய்ய நாயுடு. 45 ஆண்டுகளுக்கு பிறகும் கூட என்னை நினைவு வைத்திருப்பவர். அமித்ஷாவும் மோடியும், கிருஷ்ணன் அர்ஜூனாவை போன்றவர்கள். காஷ்மீர் விவகாரம் சிறப்பானது. அதற்காக அமித்ஷாவுக்கு வாழ்த்துக்கள் எனக்கூறினார்.
அனைத்து தலைவர்களிடம் பழகும் பண்பும், அரசு பணியை விட மக்கள் பணிதான் முக்கியம் என தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருபவர் குடியரசு துணை தலைவர் வெங்கைய்ய நாயுடு என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.