சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண்ணை வெட்டிக் கொன்ற வழக்கில் நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சார்பில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தனது மனுவில், தனது கட்சிக்காரர் ராம்குமாரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்திருப்பதாகவும், கைது செய்யப்படும்போது போலீசாருடன் சென்றவர்கள் அவரது கழுத்தை பிளேடால் வெட்டியதாகவும் கூறியிருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ராம்குமாருக்கு ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராம்குமார் ஜாமின் வழக்கில் இருந்து தான் விலகுவதாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி இன்று அறிவித்துள்ளார். மன உளைச்சல் மற்றும் வேலைப்பளு காரணமாக ராம்குமார் ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஆஜராகப்போவதில்லை என்று கூறினார்.
வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி இவ்வழக்கில் இருந்து விலகிவிட்டதால் ராம்குமாருக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.