டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வை ஆங்கிலத்தில் மட்டும் நடத்துவதா?- அன்புமணி கண்டனம்

குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கான போட்டித் தேர்வின் முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும்தான் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 18, 2022, 03:19 PM IST
  • ஆங்கிலத்தில் மட்டும்தான் போட்டித் தேர்வா?
  • தேர்வாணையம் அறிவித்திருப்பது சமூக அநீதி
  • எந்த வகையிலும் நியாயமல்ல
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வை ஆங்கிலத்தில் மட்டும் நடத்துவதா?- அன்புமணி கண்டனம்  title=

குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கான போட்டித் தேர்வின் முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும்தான் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வரும் ஜூன் 19ஆம் தேதி நடத்தப்படவிருக்கும்  குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கான போட்டித் தேர்வின் முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும்தான் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்ட 5 பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் மட்டும்தான் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது அதிர்ச்சியளிக்கிறது என்றும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தில் அம்மொழியைப் புறக்கணித்துவிட்டு போட்டித் தேர்வு நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள 16 குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு வரும் ஜூன் 19ஆம் தேதி நடத்தப்படும் என்று  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. இந்தப் போட்டித் தேர்வில் பங்கேற்க கடந்த ஒன்றாம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்தப் பணிக்கு சமூகவியல், சமூகப் பணி, உளவியல், குழந்தை பாதுகாப்பு, குற்ற ஆய்வியல் ஆகிய பாடங்களில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் மட்டும் தான் பங்கேற்க இயலும் என்றும், இரு தாள்களாக நடத்தப்படவிருக்கும் இந்தத் தேர்வுகளின் முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும்தான் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இந்த அறிவிப்பு தமிழக அரசின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாட்டுக்கு முற்றிலும் எதிரானது என்று அன்புமணி தெரிவித்துள்ளார். மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்துப் போட்டி மற்றும் நுழைவுத் தேர்வுகள் தமிழ் மொழியில் மட்டும்தான் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது என்றும், அதற்கு முன்பாகவே இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் பாமக வழக்குப் பதிவு செய்திருக்கிறது என்றும், இத்தகைய சூழலில் ஆங்கிலத்தில் மட்டும்தான் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று தேர்வாணையம் அறிவித்திருப்பது சமூக அநீதி ஆகும் என்றும் அன்புமணி கூறியுள்ளார். 

மேலும் படிக்க |  டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாட்டின் தாய்மொழி தமிழ். தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மூலம் பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாடு அரசுப் பணிகளில் நுழைந்து விடுவதை தடுக்க அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கான போட்டித் தேர்வின் இரண்டாம் தாளிலும் தமிழ் கட்டாயப் பாடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு கல்வித் தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள பட்டப்படிப்புகள் தமிழ் வழியிலும் நடத்தப்படுகின்றன. இத்தகைய சூழலில், தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஒரு போட்டித் தேர்வின் முதல் தாளை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருப்பது எந்த வகையிலும் நியாயமல்ல என்று அன்புமணி தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமின்றி, குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கு சமூகவியல், சமூகப் பணி, உளவியல், குழந்தை பாதுகாப்பு, குற்ற ஆய்வியல் ஆகிய 5 பாடங்களில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் கூறியுள்ளார். 

சட்டம், மருத்துவம், பொறியியல், வனம் போன்ற குறிப்பிட்ட நிபுணத்துவம் தேவைப்படும் பணிகளுக்கு மட்டுமே அவை சார்ந்த பாடங்களைப் படித்திருப்பது கட்டாயத் தகுதியாக அறிவிக்கப்படும். குழந்தைப் பாதுகாப்பு என்பது குடிமைப் பணிகளில் ஒன்றுதான். எந்த ஒரு பட்டப்படிப்பையும் படித்து, குழந்தை  பாதுகாப்பு குறித்த விஷயங்களில் பயிற்சியை பெற்றுக் கொண்டால் இந்தப் பணியைச் சிறப்பாக செய்ய முடியும். இந்தியாவின் மிக உயர்ந்த நிர்வாகப் பணியாக கருதப்படும் குடிமைப் பணிகளுக்குக் கூட  ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தான் கல்வித் தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடிமைப் பணி அதிகாரிகள் குழந்தை பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை சிறப்பாக கையாளுகின்றனர். அதனால் குறிப்பிட்ட 5 படிப்புகளை படித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது அநீதியாகும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க |  ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்தது ஏன்?- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசின் நோக்கங்களைப் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ற வகையில், அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி செயல்பட வேண்டும். தமிழக அரசின் கொள்கை நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணான வகையில் செயல்படுவது தவறு ஆகும். இதை உணர்ந்து குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கான போட்டித் தேர்வுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; அப்பணிக்கான போட்டித்தேர்வின் முதல் தாள் வழக்கம் போல தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும் என்று அறிவிப்பதுடன், அதற்கேற்ற வகையில் கூடுதல் அவகாசத்துடன் திருத்தப்பட்ட அறிவிக்கையைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

மேலும் படிக்க |  33% அளவுக்கு ஜி.எஸ்.டி வரியை உயர்த்துவதை விட மக்கள் மீது கொடிய சுமையை சுமத்த முடியாது: ராமதாஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News