சிதம்பரம் கோயிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களை விற்ற தீட்சிதர்கள் - பகீர் தகவல்

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 20, 2024, 10:04 AM IST
  • சிதம்பரம் கோயில் நிலம் விற்பனை
  • 2000 ஏக்கரை விற்ற தீட்சிதர்கள்
  • சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சிதம்பரம் கோயிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களை விற்ற தீட்சிதர்கள் - பகீர் தகவல் title=

தீட்சிதர்கள் நிர்வகிக்கும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் நிர்வாக குளறுபடிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இப்போது, சிதம்பரம் கோயிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்துவிட்டதாக வெளியாகியிருக்கும் குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்கோயிலின் நிர்வாக குளறுபடி தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது. சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் புதிய கட்டுமானங்கள் செய்ய எதிர்ப்பு தெரிவித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கை தொடர்ந்திருக்கும் இந்துசமய அறநிலையத்துறை, அந்த மனுவில், மாநில அளவிலான நிபுணர் குழு ஒப்புதல் பெறாமல், சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரங்களைச் சுற்றி, எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ள, பொது தீட்சிதர் குழுவுக்கு தடை விதிக்க வேண்டும். கடந்த 2008 முதல் 2014 வரை, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் இருந்தது. அப்போது, கோவிலின் வருவாய் 3 கோடி ரூபாய்க்கு மேல் இருந்தது.ஆனால், 2014ல் பொது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் கோவில் வந்தபின், 2.09 லட்சம் ரூபாய் மட்டுமே வருவாய் என, வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். தவறான நிர்வாகத்தால் வருவாய் குறைந்துள்ளது. எனவே, கோவிலின் வரவு- செலவை தணிக்கை செய்ய கணக்குகளை சமர்ப்பிக்கும்படி, பொது தீட்சிதர் குழு செயலருக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிதம்பரம் நடராஜர் கோவிலின் தணிக்கை செய்யப்பட்ட வரவு- செலவு கணக்கு விபரம், மூடி முத்திரையிட்ட உரையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, வரவு செலவு கணக்கு புத்தகங்களை தாக்கல் செய்யாமல், வருமான வரி தாக்கலுக்காக தணிக்கை செய்த கணக்கு விபரங்களை தந்துள்ளது ஏன்? என பொது தீட்சிதர்கள் தரப்புக்கு, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

இதுகுறித்து விளக்கமளித்த பொது தீட்சிதர்கள் குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிசங்கர், " அதிக கணக்கு புத்தகங்கள் உள்ளதால், அதை தாக்கல் செய்வது சிரமம். கோவிலுக்குச் சொந்தமான 1,000 ஏக்கர் நிலத்தை, அறநிலையத் துறையின் தாசில்தார் நிர்வகித்து வருகிறார். அவற்றில் இருந்து வாடகை வருவாயாக வெறும், 93,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. மன்னர்கள், புரவலர்கள் 3,000 ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கினர். தற்போது, 1,000 ஏக்கர் நிலங்களே உள்ளன. அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். பக்தர்கள் வழங்கும் காணிக்கையை, தீட்சிதர்கள் எடுத்துச் செல்கின்றனர். கோவில் நிர்வாகத்துக்கு தேவைப்படும்போது, தீட்சிதர்கள் பங்களிப்புத் தொகையை வழங்குகின்றனர். காணிக்கை வரவு செலவு கணக்கை பராமரிக்க, தனித்திட்டம் வகுக்கவும் தயாராக உள்ளோம்" வாதாடினார்.

மேலும் படிக்க | சென்னையில் பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை! அதிர்ச்சி சம்பவம்!

அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் வாதாடியபோது, " அறநிலையத் துறை வசம் கோவில் வரும்போது, நடராஜர் கோவிலுக்குச் சொந்தமாக 1,000 ஏக்கர் மட்டுமே இருந்தது. 2,000 ஏக்கர் நிலங்களை, தீட்சிதர்கள் விற்று விட்டனர். அதுகுறித்த விபரங்களை வழங்கவில்லை. பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை, கோவில் கணக்கில் தீட்சிதர்கள் செலுத்துவதில்லை. அதை எடுத்துச் செல்கின்றனர். தவறான நிர்வாகம் காரணமாக, கோவில் வருமானம் பெருமளவு குறைந்துள்ளது. தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் கோவில் வந்தது முதல் இன்று வரை, வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலங்கள் விற்கப்பட்டதும், 1,000 ஏக்கர் நிலங்களில் இருந்து லட்சத்துக்கும் குறைவாக வருவாய் கிடைப்பதும், பக்தர்கள் காணிக்கை கோவில் கணக்கில் செலுத்தப்படுவதில்லை என்பதையும் கேட்கும்போது, ஆச்சரியம், அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, 2017 - 18ம் ஆண்டு முதல் 2021 - 22ம் ஆண்டு வரை வரவு செலவு கணக்கு புத்தகங்களை, தீட்சிதர்கள் தாக்கல் செய்ய வேண்டும். காணிக்கை, செலவுகள் குறித்து கணக்கு வைப்பதற்கான நடைமுறையை உருவாக்கி, அதன் வரைவை தாக்கல் செய்ய வேண்டும்.

கோவிலுக்குச் சொந்தமாக, தற்போது எவ்வளவு பரப்பு நிலம் உள்ளது என்பது குறித்து, தாசில்தாரர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.தீட்சிதர்கள் 2,000 ஏக்கர் நிலங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டு குறித்து, முழு விபரங்களை ஆவணங்களுடன் அறிக்கையாக, அறநிலையத் துறை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர். இதனையடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

மேலும் படிக்க | எஸ்பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News