திருநங்கை ஷானவியின் மனு மீதான விசாரணை வரும் மார்ச் 5 ஆம் நாள் உச்சநீதிமண்றத்தில் வருகிறது!
முன்னதாக கடந்த பிப்., 14 ஆம் நாள் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு, தன்னை கருணை கொலை செய்துவிடுமாறு கோரிக்கை விடுத்து கடிதம் ஒன்றினை எழுதினார்.
அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது..
விமான சேவைத்துறையில் பணிப்பெண்ணாக இணைய அனைத்து தகுதிகள் இருந்தும் தொடர்ந்து தனக்கு வேலை மறுக்கப்படுவதாகவும், தான் திருநங்கை என்பதை காரணம் காட்டி பல பிரச்சணைகளை சந்தித்து வருவதாகவும் கூறி தன்னை கருணை கொலை செய்துவிடுமாறு குறிப்பிட்டு இருந்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஷானவி பொன்னுசாமி, குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆவார். அதுவும் பொறியியல் பட்டதாரி. மாடலிங், நடிப்பு என பல திறமைகளையும் கொண்டவராக இருக்கிறார். ஆனால், இவை ஏதும் அவர் விண்ணப்பித்த வேலைக்கு தகுதி சேர்க்கவில்லை.
திருநங்கை என்பதால் அவரை பணிக்கு சேர்க்க முடியாது என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துவிட்டது. தங்கள் பணிநியமனக் கொள்கையில் மூன்றாம் பாலினத்தவரை வேலைக்குச் சேர்த்துக் கொள்ள இடமில்லை எனக் கூறி அவருக்கு பணி வழங்க மறுத்துள்ளது.
என்னிடம் தகுதி இருக்கிறது, வேலை பார்த்த அனுபவமும் இருக்கிறது. எனினும் என்னுடைய பாலியல் தன்மையை காரணம் காட்டி எனக்கு கிடைக்க வேண்டிய வேலை மறுக்கப்படுகிறது.
இதற்கடுத்து வேறு எந்தவொரு விமான நிறுவனத்திலும் நான் வேலை தேடப்போவதில்லை, ஏனெனில் அரசாங்க விமான நிறுவனமே எங்களுக்கு ஒதுக்கீடு இல்லை என்று சொல்லிவிட்டது, தனியார் விமான நிறுவனத்தில் எங்களுக்கு ஒதுக்கீடு இருக்கும் என்று நான் எப்படி எதிர்பார்க்க முடியும்? எனவே இனி எனக்கு வாழ்வதற்கு வழியில்லை. அதனால் என்னை கருணைக் கொலை செய்துவிடுங்கள் என்று கூறியிருக்கிறார்.