பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக்கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி!
ஜம்மு காஷ்மீர் முன்னாள் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத் தரக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதற்கு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மெஹபூபா முப்தி, ஓமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
ஆனால் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா குறித்து எவ்வித தகவலும் இல்லை. இந்த நிலையில் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத் தரக் கோரி வைகோ உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் சென்னையில் செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் அண்ணா மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது போல் பரூக் அப்துல்லாவுக்கும் அழைப்பு விடுக்க முயன்ற போது அது முடியவில்லை.
அவர் எங்கே என தெரியவில்லை. எனவே அவரை கண்டுபிடித்துத் தர வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை உடனே விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு மறுப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த மனு மீது இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.