சேலம் பசுமை வழிச்சாலை இழப்பீடு வெறும் மோசடி -ராமதாஸ் தாக்கு

சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசுத் தரப்பில் தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 29, 2018, 02:26 PM IST
சேலம் பசுமை வழிச்சாலை இழப்பீடு வெறும் மோசடி -ராமதாஸ் தாக்கு title=

சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசுத் தரப்பில் தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

சென்னையிலிருந்து சேலத்திற்கு அமைக்கப்படவுள்ள பசுமைச் சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசுத் தரப்பில் தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையில், அதற்கான வாய்ப்பே இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் நிலங்களை பறிப்பதற்காக அரசே பொய்களை அவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது.

சென்னை& சேலம் எட்டு வழிச் சாலைக்கு நிலம் கொடுத்தால் கோடீஸ்வரர்களாகி விடலாம் என்று விவசாயிகளுக்கு ஆசை காட்டும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தொடங்கியுள்ளன. உள்ளூர் அதிகாரிகள், ஆளுங்கட்சியினர் மூலம் மக்களை அணுகும் ஆட்சியாளர்கள், நிலத்திற்கு கோடிகளில் இழப்பீடு வழங்கப்படும்; இழப்பீடு தேவையில்லை என்றால் செழிப்பான பகுதிகளில் மாற்று நிலம் வழங்கப்படும் என்று ஆசை காட்டுதலும், மிரட்டலும் கலந்து மக்கள் மனதை கரைக்கும் முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தான் பசுமைச் சாலைக்காக நிலங்களை கையகப்படுத்திய பின்னர் ஆட்சியாளர்களின் அணுகுமுறை எவ்வாறு மாறும் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இன்றைய நிலையில் சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கான முதன்மை சாலை உளுந்தூர்பேட்டை வழியாக செல்லும் சாலை தான். இந்த 4 வழிச் சாலை அமைப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கே இன்னும் முழுமையான இழப்பீடு வழங்கப்படவில்லை என்பது தான் அந்த அதிர்ச்சியூட்டும் செய்தி ஆகும். உளுந்தூர்பேட்டை முதல் சேலம் வரை 136 கி.மீ தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக 19 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், திருமண அரங்குகள், கோயில்களும் தரைமட்டமாக்கப்பட்டன.

கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 லட்சம், கிணறுக்கு ரூ.10 லட்சம், தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனாலும், நிலம் கொடுக்க பெரும்பாலான விவசாயிகள் தயாராக இல்லாத நிலையில், அவர்களை அதிகாரிகள் சந்தித்து பேசி, இத்திட்டத்திற்காக நிலம் கொடுத்தால் ஏராளமான சலுகைகள் வழங்கப்படும் என்று ஆசைக் காட்டினர்கள். அதை உண்மை என்று நம்பிய மக்களும் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக தங்களின் நிலங்களை வழங்கினார்கள். ஆனால், நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு அவர்களுக்கு மிகக் குறைந்த தொகையே இழப்பீடாக வழங்கப்பட்டது. நியாயமான இழப்பீடு வழங்கக் கோரியவர்கள் மிரட்டப்பட்டார்கள். பாதிக்கப்பட்ட மக்கள் இதுதொடர்பாக தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த 2013 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீட்டை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்பது தான் சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பாகும். ஆனால், அந்ததீர்ப்பு வழங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதை இன்று வரை அரசு நிறைவேற்றவில்லை.

சென்னை- சேலம் பசுமைச் சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு ரூ.9 கோடி வரை இழப்பீடு வழங்கப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். ஆனால், அது மக்களை ஏமாற்றும் வேலை என்பதால், எந்தெந்த நிலங்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்படும் என்ற விவரங்களை வெளியிடும்படி முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு சவால் விடுத்திருந்தேன். ஆனால், இருவர் தரப்பிலிருந்துமே இதுவரை எந்த பதிலும் இல்லை. மற்ற மாவட்ட ஆட்சியர்களாலும் இதுதொடர்பாக விவசாயிகளை திருப்திப்படுத்தும் வகையில் பதிலளிக்க முடியவில்லை. இத்தகைய சூழலில் பசுமை வழிச் சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உளுந்தூர்பேட்டை - சேலம் சாலைக்கு நிலம் கொடுத்தவர்கள் உரிய இழப்பீடு வழங்காமல் ஏமாற்றப்பட்டதைப் போல இவர்களும் ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

நிலம் கையகப்படுத்துதல் விவகாரத்தில் மக்களிடம் இழந்த நம்பிக்கையை அரசு மீண்டும் பெற வேண்டுமானால், உளுந்தூர்பேட்டை - சேலம் சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும். சென்னை - சேலம் பசுமைவழிச் சாலை சுற்றுச்சூழலுக்கும், வேளாண்மை உற்பத்திக்கும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அத்திட்டத்தை கைவிடுவதாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். 

இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

Trending News