சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ராம்குமார் புழல் சிறையில் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப் பட்டுள்ளது. நீதிபதி தமிழ்செல்வி அவர்கள் நேற்று புழல் சிறைக்கு சென்றும், பிறகு ஆஸ்பத்திரிக்கு சென்று ராம்குமாரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இன்று ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. தடய அறிவியல் துறை தலைவர் பேராசிரியர் செல்வகுமார், உதவி பேராசிரியர் மணிகண்டராஜா, ஸ்டேன்லி ஆஸ்பத்திரி அறுவை சிகிச்சை நிபுணர் பால சுப்பிரமணியம், டாக்டர் தினேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்கிறார்கள்.
தமிழ்செல்வி முன்னிலையில் ராயப் பேட்டை ஆஸ்பத்திரி டீன் நாராயண பாபு மேற்பார்வையில் பிரேத பரிசோதனை நடக்கிறது. இதற்காக அனைவரும் தயாராக உள்ளனர்.
ஆனால் இதுவரை ராம்குமாரின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு வரவில்லை. அதனால் பிரேதபரிசோதனை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.