அண்ணாமலைப் பல்கலை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கமால் அரசு வேடிக்கை பார்ப்பதை கண்டித்தும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியாட்டுள்ளார்!
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
"உழைப்பாளர்களின் வியர்வை அடங்குவதற்குள்ளாக அவர்களுக்குரிய ஊதியத்தை வழங்கிவிட வேண்டும் என்பது தான் தமிழர்களின் பண்பாடாகும். ஆனால், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு செப்டம்பர் ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை.
ஒவ்வொரு மாதமும் கடைசி பணி நாளில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது தான் விதியாகும். தமிழக அரசு ஊழியர்களுக்கும், மற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கும் அவ்வாறு தான் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு மட்டும் குறித்த தேதியில் ஊதியம் வழங்கப்படுவதில்லை. கடந்த நான்காண்டுகளில் பலமுறை இதுபோல் நடந்திருக்கிறது.
இதைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் தமிழக அரசின் உயர்கல்வித்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிடுவதும், அதைத்தொடர்ந்து அரசு உதவியுடன் ஊதியம் வழங்கப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், இப்போது மட்டும் அக்டோபர் 13 தேதியாகியும் இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து பல்கலைக்கழக பணியாளர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தியும் பல்கலைக்கழக நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை தமிழக அரசு கையில் எடுத்துக் கொண்டதற்கு காரணமே நிதி நெருக்கடி தான். தனியாரின் நிர்வாகத்தில் இருந்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விதிகளை மீறி பணியாளர் நியமனம் உள்ளிட்ட விதிமீறல்களும், முறைகேடுகளும் நடந்ததால் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அனுமதிக்கப்பட்ட அளவை விட ஆசிரியர் உள்ளிட்ட பணியாளர்கள் இருந்ததால் அவர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டதைக் காரணம் காட்டித்தான் பல்கலைக்கழக நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது.
அதன்பின்னர் நான்கு ஆண்டுகள் ஆகியும் அதே நிலை நீடித்தால் அரசு நிர்வாகமும் தோற்று விட்டது என்று தானே பொருள்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அதிக பணியாளர்கள் இருப்பது தான் நிதி நெருக்கடிக்கு காரணம் என்று கூறினார்கள். ஆனால், அண்மைக்காலங்களில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் பல்கலைக்கழகத்தின் நிதி நிலை மேம்பட்டிருக்க வேண்டும். ஆனால், நிலைமை மோசமடைந்திருக்கிறது.
பல்கலைக்கழகத்தின் செலவுகளை யாருக்கும் பாதிப்பு இல்லாமல் குறைப்பதும், வருவாயைப் பெருக்குவதும் தான் இச்சிக்கலுக்கு தீர்வாகும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக அதை பன்மைப் பல்கலைக்கழகமாக மாற்றுவது உட்பட ஏராளமான ஆக்கப்பூர்வயோசனைகளை பாட்டாளி மக்கள் கட்சி வழங்கியது. ஆனால், அவற்றையெல்லாம் செயல்படுத்துவதில் தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை.
அக்டோபர் முதல் வாரத்திற்குள் செப்டம்பர் ஊதியம் வழங்கப்பட்டு விடும்; ஆனால், இச்சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது தான் மிகவும் சவாலாக இருக்கும் என்று தான் அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர். ஆனால், அரை மாதம் ஆகியும் செப்டம்பர் ஊதியமே வழங்கப்படாததால் பல்கலைக்கழக பணியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தீப ஒளித் திருநாளுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இன்னும் ஊதியம் வழங்கப்படாததால் தீபஒளித் திருநாளைக் கூட அண்ணாமலைப் பல்கலை பணியாளர்களால் கொண்டாட முடியாத நிலை உருவாகியுள்ளது. இது துயரத்திலும் துயரமானதாகும்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிலவும் நிதி நெருக்கடியால் பணியாளர்களுக்கு பதவி உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவை பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இதனால் ஊழியர்களின் செயல்பாட்டுத் திறன் குறைவதை அரசு உணர வேண்டும். நிதி நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான உத்திகள் வகுத்து செயல்படுத்தப்படும் வரை பல்கலைக்கழகத்தின் நிதிப்பற்றாக்குறையை ஏற்றுக் கொள்ள வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
அந்தக் கடமையை அரசு நிறைவேற்ற வேண்டும். மாறாக அண்ணாமலைப் பல்கலைக்கழக நெருக்கடிக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போன்று தமிழக அரசு ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்ப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.
அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு இன்று அல்லது நாளைக்குள் செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும். பின்னர் கல்வியாளர்கள், பொருளாதார வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து இந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
மீண்டும் ஒருமுறை அண்ணாமலைப் பல்கலை. பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டால், கட்டுப்படுத்த முடியாத போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்"
என அவர் தெரிவித்துள்ளார்