சென்னை: தமிழ்நாட்டிலிருந்து (Tamil Nadu) ராஜ்யசபாவுக்கு ஆறு வேட்பாளர்கள், அதாவது அதிமுக (AIADMK) மற்றும் திமுக (DMK) கட்சிகளை சேர்ந்த தலா மூன்று பேர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களின் வேட்புமனுக்கள் திங்கள்கிழமை (மார்ச் 16, 2020) ஏற்றுக்கொள்ளப்பட்டன.
மாநிலங்களவை (Rajya Sabha) சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் மக்களவை (Lok Sabha) முன்னாள் துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை, முன்னாள் மத்திய அமைச்சர் ஜி கே வாசன் ஆகியோர் அடங்குவர்.
ஆறு பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், அந்த ஆறு பேரும் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதிமுக சார்பில் தம்பிதுரை (Thambidurai) மற்றும் கே பி முனுசாமி (K P Munusamy) மற்றும் இதன் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் (G K Vasan) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திமுக சார்பில் மூன்று பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் பின்வருமாறு, என் ஆர் இளங்கோ (N R Elango), பி செல்வராஜ் (P Selvaraj) மற்றும் திருச்சி சிவா (Tiruchy Siva) ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள, விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக (DMDK) கட்சி தங்களுக்கு ஒரு மாநிலங்களவை இடம் வேண்டும் என்ற கோரிக்கையின் மத்தியில், ஜி.கே. வாசனுக்கு ஆளும் கட்சியால் இடமளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி மார்ச் 18 ஆகும். மார்ச் 26 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
ஏப்ரல் 2 ம் தேதி அதிமுக (AIADMK), திமுக (DMK) மற்றும் சிபிஐ (CPI M) ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இந்த ஆறு இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.