கிழக்கு திசைக்காற்று வலுப்பெற்றுள்ளதால் தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால், தமிழக மக்கள் அனைவரும் கடுமையான வெப்பநிலையால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கிழக்கு திசைக்காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு, தென் தமிழக கடலோர பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்திருக்கிறது. வங்ககடலில் ஏற்பட்டுள்ள தொலைத்தூர சலனங்களால், திங்கட்கிழமை இரவு வரை வழக்கத்தை விட 2 மீட்டர் அளவிற்கு கடல் அலைகள் உயர்ந்து காணப்படும் என்றும், இதனால், தென் தமிழக பகுதி மீனவர்கள், பாதுகாப்பாக கடலுக்குள் செல்லுமாறு, வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த 24 மணி நேரத்தில், குறிப்பிட கூடிய அளவில், எங்கும், மழை பதிவாக வில்லை என்றும் கூறியுள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் தெளிவாக இருக்கும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.