புதுச்சேரி மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்து, தனியார் நிகழ்ச்சிகளில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கலந்து கொள்வதாக, முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் கடந்த சில வருடங்களாகவே யாருக்கு அதிகாரம் என்பதில் போட்டி நிலவிவருகிறது. இந்தநிலையில், அதிகாரப் போட்டியின் உச்சமாக, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு கருப்புச் சட்டை அணிந்து முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களது, கடந்த புதன்கிழமை துவங்கிய போராட்டம் தொடர்ந்து நான்காவது நாளாக நீடித்து வருகிறது. இதையடுத்து, ஆளுநர் மாளிகை முன் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் தர்ணாப் போராட்டம் இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நாராயணசாமியை நேரில் வாழ்த்துத் தெரிவித்தார்.
இதேபோல், புதுச்சேரியில் நேற்று 12 இடங்களில், காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள், ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தர்ணாவிற்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது விமர்சனங்களை முன்வைத்தார்.