சென்னை: தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை நள்ளிரவு முதல் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் பொன்னு சாமி கூறும் போது, " பாலுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டோட்லா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ் உள்ளிட்ட முன்னணி பால் நிறுவனங்கள், இன்று முதல் பால் விற்பனை விலையை உயர்த்தப் போவதாக பால் முகவர்களுக்கு சுற்றிக்கை அன்னுப்பியுள்ளனர்.
பால் விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரையும், தயிருக்கான விலையை லிட்டருக்கு 5 ரூபாயும் உயர்த்தப்போவதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. நிறுவனகளின் இந்த தன்னிச்சையான முடிவுகளுக்கு எங்களது சங்கம் கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறது மேலும் இந்த விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்.பாலுக்கான கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்ய வேண்டும்" என்று அவர் கூறினார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தியுள்ளன.
பால் மட்டுமின்றி தயிர் விலையும் 1 லிட்டருக்கு ரூ.5 அதிகரித்துள்ளது. அதாவது 1 லிட்டர் தயிர் விலை இனி ரூ.55 ஆக இருக்கும். இந்த பால்விலை உயர்வால் டீ, காபி ஆகியவற்றின் விலை கணிசமாக உயரும் நிலை உள்ளது.