திருச்சியின் திருவெறும்பூர் பகுதியில், இருசக்கர வாகனத்தில் தனது கணவருடன் சென்றுகொண்டிருந்த உஷா என்ற 3 மாத கர்ப்பிணி, கீழே விழுந்து உயிரிழந்தார். ஹெல்மெட் சோதனை செய்ய அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த இருந்த காவல்துறை அதிகாரி காமராஜ் அவர்களது வாகனத்தை எட்டி உதைத்தால் தான் உஷா கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அந்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது உஷாவின் கணவர் ராஜா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் திருவெறும்பூரில் காவல் ஆய்வாளரால் உயிரிழந்த கர்ப்பிணி பெண் உஷாவின் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுவதாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 7 லட்சம் வழங்க முதல் அமைச்சர் முதல் அமைச்சர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை, சூரமங்கலத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் 7.3.2018 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடி சுங்கச்சாவடி அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், நிற்காமல் சென்ற ராஜாவின் இரு சக்கர வாகனத்தை நிறுத்த முற்பட்ட போது, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த திரு. ராஜா என்பவரின் மனைவி உஷா என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த திருமதி உஷா அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த உஷா குடும்பத்தினரின் நிலையைக் கருத்தில் கொண்டு அவரது குடும்பத்திற்கு ஏழு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
எனது உத்தரவின் பேரில், திருவெறும்பூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்பட்டுள்ளார். துறை ரீதியாக பணி இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக குற்றவியல் விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. குற்றவியல் விசாரணையின் முடிவின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.