தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற கருத்துக்கு இணையாக தை மாதத்தின் முதல் நாளாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.
பொங்கல் திருநாள் அன்று, சூரியபகவானுக்கு பூஜை செய்து வழிபட்டால் பல நன்மைகள் ஏற்படும். இந்த நன்னாளில் நல்லநேரம் பார்த்து, பொங்கல் பானையில் பொங்கல் செய்ய வேண்டும். பிறகு வடை, பாயசம், 21 வகையான காய்கறிகளை கொண்டு சமைத்து, சூரியபகவானுக்கு படைத்து வணங்கும்போது, 21 வகையான சமைக்காத பச்சை காய்கறிகளையும் வைத்து, அத்துடன் மஞ்சள் கொத்து, இஞ்சிகொத்து, கரும்பும் வைத்து, சூரியபகவானுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும்.
பொங்கல் விழா நான்கு நாள் கொண்டாட்டம் ஆகும்.
போகி:-
போகி தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தநாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.
வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.
போகி பண்டிகை இந்திரனுக்காக ஆயர்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.
தைப்பொங்கல்:-
தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
மாட்டுப் பொங்கல்:-
மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இதை கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும்.
காணும் பொங்கல்:-
காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் என்று அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும்.
இந்நாளின் சிறப்பே கணுப்பிடி தான். இது ஒருவகை நோன்பு. உடன்பிறந்த சகோதரர்களுக்காக பெண்கள் செய்யும் நோன்பு. உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் பிரார்த்திப்பது.