விவசாயத்தை காக்க உடனடி நடவடிக்கை தேவை -பாமக வலியுறுத்தல்!

விவசாயத்தை காக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!

Last Updated : Jan 28, 2019, 11:42 AM IST
விவசாயத்தை காக்க உடனடி நடவடிக்கை தேவை -பாமக வலியுறுத்தல்! title=

விவசாயத்தை காக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... "தமிழ்நாட்டில் சம்பா நெல் சாகுபடி குறித்து மத்திய வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டில் சம்பா நெல் சாகுபடி கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு 26.85% குறைந்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. இதை சாதாரணமான புள்ளி விவரமாகக் கருதி கடந்து சென்று விட முடியாது என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.

2018-19 ஆம் ஆண்டு சம்பா (ரபி) பருவத்தில் ஒவ்வொரு பயிரும் எந்த அளவுக்கு சாகுபடி செய்யப் பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை மத்திய அரசின் வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 2018-19 ஆம் ஆண்டின் சம்பா பருவத்தில் நெல், கோதுமை, பருப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்துப் பயிர்களும் சேர்த்து நாடு முழுவதும்  591.64 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் சாகுபடியை விட 30.47 லட்சம் ஹெக்டேர் குறைவாகும். அண்மைக்காலங்களில் சம்பா சாகுபடி இந்த அளவுக்கு குறைந்ததில்லை என்பது ஒருபுறமிருந்தாலும், சாகுபடி பரப்பு குறைந்தது வெறும் 4.89% மட்டுமே என்பதால் இதில் பெரிதாக கவலைப்பட எதுவுமில்லை.

ஆனால், தமிழகத்தில் நெல் சாகுபடி நிலைமை தான் மிகவும் கவலையளிக்கிறது. 2018-19 ஆம் ஆண்டு சம்பா பருவத்தில் தமிழகத்தில் 8.61 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மட்டும் தான் நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. இது 2017-18 ஆம் ஆண்டில் சம்பா நெல் பயிரிடப்பட்ட 11.77 லட்சம் ஹெக்டேருடன் ஒப்பிடும் போது 26.85% குறைவு ஆகும். நடப்பாண்டில், மேட்டூர் அணையில் அதிக அளவு தண்ணீர்  இருந்ததால் சம்பா சாகுபடிக்கு சாதகமான சூழல் நிலவியது. அதனால், மொத்தம் 12.78 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்ய அரசு சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதனுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில் 4.17 லட்சம் ஹெக்டேர், அதாவது 32.62% குறைவாகவே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதையே வேறு வார்த்தைகளில் கூறினால், சம்பா சாகுபடி இலக்கில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது.

சம்பா நெல் சாகுபடியைப் பொறுத்தவரை, நாட்டின் மொத்த சாகுபடி பரப்பான 23 லட்சம் ஹெக்டேரில்  பாதிக்கும் மேல் தமிழகத்தில் தான் நடைபெறுகிறது. தேசிய அளவில் சாகுபடி பரப்பு 21% மட்டுமே  குறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் 6.85% குறைந்துள்ளது. தெலுங்கானா, அஸ்ஸாம், கேரளம் ஆகிய மாநிலங்களில் நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ள நிலையில், தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மட்டும் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. இந்த மாநிலங்களிலும் கூட தமிழகத்தில் தான் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சாகுபடி பரப்பு குறைந்துள்ளது என்பது கவலையளிக்கிறது.

தமிழ்நாட்டில் சம்பா சாகுபடி பரப்பு குறைந்ததற்கு வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாதது தான்  காரணம் என்று கூறப்படுகிறது. நடப்பாண்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 24% குறைவு  தான் என்றாலும், சம்பா சாகுபடி குறைய இது மட்டுமே காரணமல்ல. மழையைத் தாண்டி ஏராளமான காரணிகள் உள்ளன. அவற்றில் நெல் கொள்முதல் விலை போதுமானதாக இல்லாததும், கொள்முதல் கட்டமைப்பில் குறைபாடுகள் இருப்பதும் தான் மிகவும் முக்கியமானவை ஆகும். நெல்லுக்கான உற்பத்தி செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலையை நிர்ணயிப்பதாகக் கூறிய மத்திய அரசு, சாதாரண நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 1550 ரூபாயிலிருந்து 1750 ரூபாயாகவும், சன்னரக நெல்லுக்கான கொள்முதல் விலை 1590 ரூபாயிலிருந்து 1770 ரூபாயாகவும் அதிகரித்தது. தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்திக்கு ரூ.1781 செலவாகும் நிலையில், அத்துடன் 50% லாபம் சேர்த்து நெல் கொள்முதல் விலையை ரூ. 2671 ஆக மத்திய அரசு அதிகரித்திருக்க வேண்டும்.

ஆனால், மத்திய அரசு அவ்வாறு செய்யாத நிலையில், மாநிலத்தில் கொள்முதல் கட்டமைப்புகள் சரியாக இல்லாததால், விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல்லை தனியாரிடம் அடிமாட்டு விலைக்கு  விற்க வேண்டியுள்ளது. இதுதவிர கஜா புயல், வறட்சி உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் உழவர்கள் கடுமையான இழப்புக்கு ஆளாகின்றனர். விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பது, ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் காரணமாக வேளாண் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காதது உள்ளிட்ட பல காரணங்களால் வேளாண்மை என்பது இழப்பை உண்டாக்கும்  தொழிலாகி விட்டது. அதன்காரணமாக உழவுத் தொழிலில் இருந்து விவசாயிகள் வெளியேறுவதால் தான் சாகுபடி பரப்பு வெகுவாகக் குறைகிறது. கசப்பாக இருந்தாலும் இது தான் உண்மை ஆகும்.

எனவே, தமிழகத்தில் சம்பா சாகுபடி பரப்பு குறைந்ததை சாதாரணமான நிகழ்வாகக் கருதாமல், இதை ஓர் அபாய எச்சரிக்கையாக மத்திய, மாநில அரசுகள் கருத வேண்டும். வேளாண் தொழில் நலிவடையக் காரணங்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைத்துக் குறைகளையும் சரி செய்து, வேளாண்மையைக் காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்

 

Trending News