சென்னை: மக்கள் பாவலர் என்று அறியப்படும் பிரபல கவிஞர் இன்குலாப் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
எஸ். கே. எஸ். சாகுல் அமீது என்னும் இயற்பெயர் கொண்ட இன்குலாப் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிறந்தார். பள்ளிப் படிப்பைக் கீழக்கரையில் முடித்துவிட்டு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்து படித்தார். மதுரைத் தியாகராசர் கல்லூரியில் இளங்கலை வகுப்பில் சேர்ந்து பயின்றார். படிப்பை முடித்த பின்னர் சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
சிற்பி இலக்கிய விருது, கவிஞர் வைரமுத்து விருது போன்ற விருதுகளைப் பெற்றவர். இவருடைய 'நாங்க மனுஷங்கடா', கண்மணி ராஜம், மீட்சி, சூரியனை சுமப்பவர்கள் போன்ற படைப்புகள் காலத்தால் அழியாதவை. தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதினார்.
மார்க்சிய ஆய்வாளர் எஸ். வி. ராஜதுரையுடன் இணைந்து 'மார்க்சு முதல் மாசேதுங் வரை' என்னும் மொழியாக்க நூலையம் வெளியிட்டுள்ளார். "நாங்க மனுசங்கடா" என்னும் புகழ் பெற்ற பாட்டு இன்று வரை எண்ணற்ற மேடைகளில் தலித்து மக்களால் பாடப்படுகிறது.
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இன்குலாப், இன்று காலை மரணம் அடைந்தார்.