ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று சிறைத்துறை மீதான மானிய கோரிக்கையின் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
அதற்கு முதல்வர் பழனிசாமி பதில் அளிக்கையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எங்களுடைய பணியை சிறப்பாக செய்து தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதற்கு மேல் முடிவு தமிழக ஆளுநர் கையில் தான் உள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து விதி எண் 110-ன் கீழ் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ரூ. 64.35 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என தமிழக சட்டப்பேரவில் விதி எண் 110-ன் கீழ் வெளிட்ட அறிக்கையில் முதலவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிடுகையில்., "இளைஞர் விளையாட்டு திட்டத்தினை செயல்படுத்த தனி குழு அமைக்கப்படும். சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு ரூ. 5 கோடியில் புதிய கட்டிடம் கட்டித்தரப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து ரூ. 210 கோடியில் மதிப்பீட்டின் 2 மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும் எனும் அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். அதன்படி விழுப்புரம் காஞ்சிபுரத்தில் ரூ. 210 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும் என்றும், ஆறுக்காட்டுத் துறையில் ரூ. 150 கோடி செலவில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். பின்னர் மீனவர் பாதுகாப்பு குறித்து பேசிய அவர்., தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், பெரியதாழையில் மீனவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ரூ. 30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடற்கரையினை பாதுகாக்க அலை தடுப்புச்சுவர் கருங்கற்கள் மற்றும் கான்கிரீட் கற்களால் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.