தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்று விட்டது. ஸ்டாலின் தான் வராரு..விடியல் தரப் போறாரு என திமுகவும்...வெற்றி நடை போடும் தமிழகமே அதிமுகவும் சமர் செய்ய தமிழக மக்கள் ஸ்டாலினுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்தனர். கொரோனா இரண்டாம் அலையின் உச்சகம், கடனில் சிக்கித்தவிக்கும் நிதி நிலைக்கு இடையே முத்துவேல் கருணாநிதி எனும் நான் என தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார் ஸ்டாலின்.. ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் விடியல் பெற்றதா தமிழகம்...தற்போது பார்ப்போம்.
தமிழகம் நிதி நிலைமை நெருக்கடியில் இருந்த நிலையில் பதவியேற்ற ஸ்டாலின் முதன்முதலாக கையெழுத்திட்ட 5 கோப்புகளும் மிகுந்த வரவேற்பை பெற்றன. தேர்தல் வாக்குறுதியின் படி ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் வழங்குமென அறிவிக்கப்பட்டு, முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் மே மாதத்திலும், 2-வது தவணை ஜூன் மாதத்திலும் வழங்கப்பட்டது. இதற்காக 4 ஆயிரத்து 153 கோடி செலவிடப்பட்டது.
அதேபோல தேர்தல் அறிக்கையில் கூறியபடி தமிழகத்தில் சாதாரண கட்டண அரசுப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்ற திட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது. இந்தத்திட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றதோடு, தேசிய அளவில் பல கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றது. இத்திட்டத்தினால் கல்வி, சமூக மற்றும் பொருளாதார பங்களிப்பில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக உயர்ந்தது. தற்போது இத்திட்டத்தின் விரிவாக்கமாக 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளும் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைப் பெறும் மக்களின் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காண 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டத்தை செயல்படுத்த புதிய துறை உருவாக்கப்பட்டது.
மேலும் படிக்க | ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்தது ஏன்?- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
தேர்தல் அறிக்கையில் கூறியபடியே வேளாண்துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது விவசாயிகள் இடையே வரவேற்பைப் பெற்றது. 2021 ஆகஸ்ட் 14-ம் தேதியன்றும், கடந்த மார்ச் 19-ம் தேதியன்றும், இதுவரை இரண்டு வேளாண் நிதிநிலை அறிக்கைகள் தமிழ்நாடு அரசால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இது முதல் படி என்றாலும், வேளாண் பட்ஜெட்டின் வெற்றி என்பது, அதன் பலன்கள் கடைசி விவசாயியையும் சென்று சேர்கிறதா என்பதைப் பொறுத்தே அமையும்.
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போல மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என அறிவித்தபடி, மதுரையில் அதி நவீன நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. ஆறு தளங்களில், 2 லட்சம் சதுர அடியில் அமையவுள்ள உள்ள இந்த நூலகத்தின் கட்டுமானப் பணிகள் ஓராண்டுக்குள் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கடவுள் நம்பிக்கைக்கு எதிரான கட்சி என்ற கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களின் நில உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது அரசின் வெளிப்படைத்தன்மை மீதான நம்பிக்கையை அதிகரித்தது. இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் படி கடந்த ஓராண்டில் 720 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டு பாடப் புத்தகங்களில் ஒன்று முதல் 12 -ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களில் உள்ள தலைவர்களின் பெயர்களின் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கம் செய்யப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்பைப் பெற்றது. தமிழ்நாட்டில் முதன்முறையாக, பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் வகையில், “பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும்” என்ற அறிவிப்பும் வரவேற்கத் தக்கதாகும்.
அதேபோல் கடந்த பட்ஜெட்டின் போது, பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. அப்போது லிட்டர் 102 ரூபாய்க்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல் மீண்டும் 100 ரூபாய்க்கு கீழ் குறைந்தது. இதேபோல கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவி குழுவினர் பெற்ற 2 ஆயிரத்து 756 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதே போல், கொரோனா காரணமாக பெற்றோரை இழந்தோர், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற அறிவிப்பு இளைஞர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
எழுவர் விடுதலைக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக-வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட நிலையில், தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டு பேரறிவாளன், நளினி ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தமிழக அரசு அடுத்தடுத்து பரோல் நீட்டிப்பு வழங்கி வருவது அரசியல் சதுரங்கத்தில் முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது. பேரறிவாளன் விடுதலையில் உள்ள தாமதம் குறித்து உச்சநீதிமன்றமே மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இவ்விவகாரத்தில் விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவையெல்லாம் மக்களுக்கு நேரிடையாக செல்லக்கூடிய அறிவிப்புகளாக இருக்க சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் திமுக அரசு மேற்கொண்டுள்ள பல நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்' என மாற்றி அமைத்தது தமிழக அரசு. திருமண உதவித் திட்டத்தின் படி பத்தாவது வரை படித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும், 8 கிராம் தங்கமும் வழங்கப்படும். பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும், 8 கிராம் தங்கமும் வழங்கப்படும். இந்த திட்டத்தை அரசுப் பள்ளியில் 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மாற்றி அமைத்தது தமிழக அரசு. திருமணம் என்பது பெண்களின் இலக்காக இல்லாமல் அவர்களுக்கு கல்வியை அளிக்கும் பட்சத்தில், கல்வி அவர்களது நிரந்தர சொத்தாக அமைவதோடு பெண்களே சுயமாக செயல்படும் என்பது தமிழக அரசின் வாதம். அதே சமயம் ஏழைப்பெண்களின் திருமணத்திற்காக வழங்கப்படும் உதவித்தொகையை நிறுத்தியது சரியல்ல என்ற விமர்சனமும் எழுந்தது.
குடியரசு தின விழா ஊர்வலத்திற்கு தமிழக அரசால் அனுப்பப்பட்ட ஊர்தியை மத்திய அரசு நிராகரித்தபோது, அதே ஊர்தி தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு விழாவில் இடம்பெற்றதோடு, தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் பொதுமக்களின் பார்வைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் அதே மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியது தமிழக அரசு. தற்போது அந்த மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்சிப்பொறுப்பேற்ற 100-வது நாளில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின்படி பல்வேறு சாதிகளைச் சேர்ந்த 58 பேரை அர்ச்சகர்களாக நியமனம் செய்து அதற்கான ஆணையும் வழங்கப்பட்டது. அவர்களில் 6 பேர் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம் மாநில அரசின் பரிந்துரையின் அடிப்படையில் ஆளுநரால் மேற்கொள்ளப்பட்ட நிலையில், துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பான மசோதாவையும் தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது. புதிய கல்விக்கொள்கையைக்கு பதிலாக தமிழ்நாட்டுக்கென மாநிலக் கல்விக்கொள்கை அமைக்கப்படுமென அறிவித்து, டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த. முருகேசன் தலைமையில் தமிழக அரசு புதிய குழு அமைத்தது தேசிய அளவில் கவனம் ஈர்த்தது. இந்த குழு ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக அரசின் நிறைகளைப் பற்றி பேசும் நிலையில் குறைகளும் இல்லாமல் இல்லை. கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலினே நேரடியாக போராடிய நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு மதுக்கடைகளை குறைப்பதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. அரசின் வருவாய் குறையும் என்றது இதற்கு ஒரு காரணமாக கூறப்படும் நிலையில், வருவாய்க்காக மதுவினால் ஏற்படும் தீமைகளை சகித்துக் கொள்வதா என்ற விமர்சனமும் எழுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது சாத்தான்குளம் தந்தை - மகன் காவல்துறை விசாரணைக்காக அழைத்து வரப்பட்டு மரணமடைந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை நாம் மறந்திருக்க முடியாது. தற்போது திமுக ஆட்சியிலும் விசாரணைக் கைதிகள் மரணமடைந்த சம்பவம் பூதாகரமாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த விக்னேஷ், திருவண்ணாமலையைச் சேர்ந்த தங்கமணி என கடந்த வாரத்தில் இரு விசாரணைக் கைதிகள் அடுத்தடுத்து மரணமடைந்தனர். சமூக வலைதளங்களிலும், பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பிலும் இதற்கு கண்டனம் எழுந்தன.
மேலும் படிக்க | விக்னேஷ் லாக்கப் மரணமும் சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பும்
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஒன்றாம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்புகளை சரி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட இல்லம் தேடிக் கல்வி திட்டமானது, புதிய கல்விக்கொள்கையின் அம்சம் எனவும், அரசு பள்ளிகளை பலவீனமாக்கும் தந்திரம் எனவும் ஒரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.
திமுக பிரதிநிதிகள் பொதுமக்களைத் தாக்குவது, உணவகங்களிலோ அல்லது வணிக நிறுவனங்களிலோ உரிய கட்டணம் செலுத்தாமல் வன்முறையில் ஈடுபடுவது போன்ற சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. பொங்கல் பண்டிகையை ஒட்டி 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை தமிழக அரசு வழங்கிய நிலையில். பல்வேறு இடங்களில் தரமற்ற பொருட்கள் விநியோகிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க் கடன்கள் மற்றும் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், ஆட்சிப்பொறுப்பெற்ற பிறகு 5 சவரன் வரையிலான நகைக்கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறிய தமிழக அரசு அதற்கும் பல நிபந்தனைகளை விதித்தது. அதே போல பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டோருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை எனவும் கூறியது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் நகைக்கடன் தள்ளுபடி குறித்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சு விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற உதயநிதி ஸ்டாலினிடம், தனக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என பெண் ஒருவர் கேள்வி எழுப்பியது பேசுபொருளானது.
திமுக-வின் வெற்றிக்கு அதன் தேர்தல் அறிக்கையும் பிரதான காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த தேர்தல் அறிக்கையிலும் மிக முக்கியமான வாக்குறுதி, மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்பதாகும். இத்திட்டத்திற்கான பயனாளிகளை கண்டறிவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நிதிநிலைமை முன்னேற்றம் காணும் போது இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இந்த வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படாதது திமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதே போல நெல்லுக்கு குவிண்டாலுக்கு 2 ஆயிரத்து 500 வழங்கப்படும், கரும்புக்கு குவிண்டாலுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எப்போது இந்த வாக்குறுதிகள் அமலாக்கப்படும் என்ற தகவலும் தெரியவில்லை.
செயல்பாடுகளில் உள்ள இந்த குறைகளை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். எது எப்படி இருந்தாலும் திமுக அரசு பொறுப்பேற்றப் பிறகே சித்தாந்த அரசியலில் தேசிய அளவில் தமிழகத்தின் குரல் அதிக அளவில் கேட்கத் தொடங்கியுள்ளது. Stalin is More Dangerous than Karunanithi என பாஜகவினரே கூறுவதே அதற்குச் சான்று.
மேலும் படிக்க | 5 வருட சாதனை ஒரே ஆண்டில்..என்ன செய்தது திமுக.?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR