தேர்தலுக்கு பிறகு தான் என் அரசியல் வாழ்க்கை தொடங்கும் என்று ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி!!
வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரட்சரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி “ போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்டமாக சேலம் மாற பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியுள்ளது.
சேலத்திற்கு செய்த சாதனைகள் மட்டும் 3 பக்கங்கள் உள்ளன. நவீன மகப்பேறு மருத்துவமனை, பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு தார் சாலை, அடுக்குமாடி கான்கிரீட் வீடு, ராணுவ தளவாடங்கள் உதிரி பாகங்கள் தயாரிக்க புதிய தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டன. சேலத்தில் தங்கு தடையின்றி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மேச்சேரி - ஓமலூர் இடையே மிகப்பெரிய காய்கறி சந்தை அமைக்கப்படும்.
மக்களுக்காக சேவை செய்யும் அரசை ஸ்டாலின் கொச்சைப்படுத்தி வருகிறார். இந்த தேர்தலுக்கு பிறகு எடப்பாடியின் அரசியல் வாழ்க்கை கிழிந்துவிடும் என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். ஆனால் நான் சொல்கிறேன், இந்த தேர்தலுக்கு பிறகு தான் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை துவங்கும். ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு ஒருநாளும் நிறைவேறாது. சேலம் மக்கள் எனக்கு முதலமைச்சர் பதவி வழங்கியிருக்கிறார்கள். எனக்கு கிடைக்கின்ற பெருமை உங்களுக்கு கிடைக்கிற பெருமை, இந்த தேர்தல் வெற்றி உங்களை சாரும்” என்று தெரிவித்தார்.