தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் கடந்த மாதம் நடந்த நிலையில், மாநிலத்தின் புதிய முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே ஏழாம் தேதி பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
பதவியேற்ற உடனேயே புதிய அரசு செயலில் இறங்கியது. பலவித மக்கள் நலத் திட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இவை உடனடியாக செயலாக்கத்திலும் வந்துள்ளன.
கொரோனா தொற்று (Coronavirus) உலகையே பாடாய் படுத்தி வரும் நிலையில், கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான பலவித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளதோடு, தமிழக நிவாரணத் தேவைகளைப் பற்றி விரிவான ஒரு கடிதத்தையும் முதல்வர் பிரதமருக்கு அனுப்பியுள்ளார். கொரோனா பரவலைத் தடுக்க இன்று முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது மே 24 வரை அமலில் இருக்கும்.
பல்வேறு துறைகளின் அமைச்சர்களும் பதவி ஏற்ற உடனேயே அவர்களது துறை சார்ந்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதைக் காண முடிகிறது.
இந்த நிலையில், புதிதாக பதவி ஏற்றுள்ள அனைத்து அமைச்சர்களும் மக்கள் பணிகளில் நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) கூறியுள்ளார். அமைச்சர்கள் தவறு செய்தால், அவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ALSO READ: அத்தியாவசிய பணிகளுக்கு 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும்!
இது குறித்து அமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் விடுத்துள்ள அறிவுறுத்தல்கள் பின்வருமாறு:
- அமைச்சர்கள் அனைவரும் நேர்மையாகவும், நியாயமாகவும் தங்கள் பணிகளில் ஈடுபட வேண்டும். தவறு செய்யும் அமைச்சர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என முதல்வர் எச்சரித்துள்ளார்.
- அமைச்சர்கள் தங்கள் துறைகளின் பணி நியமனங்கள், அமைச்சர்களின் பி.ஏ-க்களின் நியமனங்கள் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
- தங்கள் தொகுதிகளில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து யாரும் காவல்துறையை நேரடியாக தொடர்பு கொள்ளவோ, தொலைபேசியில் அழைக்கவோ கூடாது என்று முதல்வர் தெரிவித்தார். காவல்துறை தன் அதிகாரத்துக்குள் இருப்பதால், எந்த பிரச்சனையாக இருந்தாலும், தன்னிடம் நேரடியாக புகார் அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களிடம் கூறினார்.
- 10 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சி அட்சிக்கு வந்துள்ளதால், மக்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்கான மிகப்பெரிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
- அமைச்சர் பதவிக்கு தகுதியானவர்கள் நம் கட்சியில் பலர் இருக்கிறார்கள். பலருக்கு இதற்கான வாய்ப்பு கிடைக்காத நிலையில், உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக, சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று திமுக (DMK) ஆட்சியமைத்த பிறகு, நேற்று முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்குப் பிறகு, மு.க. ஸ்டாலின் பிரத்யேகமாக அமைச்சர்களுடன் உரையாடினார். அப்போது அவர் அமைச்சர்களுக்கு இந்த அறிவுரைகளை வழங்கியதாக கூறப்படுகின்றது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR