பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நாளை முதல் லட்டு பிரசாதம் அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில். இக்கோவிலுக்கு நாடெங்கிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். உலக புகழ் பெற்ற இக்கோவிலில் நாளை முதல் இலவசமாக சுமார் 30கி எடை கொண்ட லட்டு பிரசாதமாக கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மனை தரிசனம் செய்து விட்டு சொக்கநாதரை தரிசிக்க செல்லும் வழியில் முக்குறுணி விநாயகர் சந்நிதி அருகில் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு கொடுக்கபட உள்ளது. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு கடந்த தீபாவளி அன்று, மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டது, பின்னர் சில காரணங்களால் தள்ளிப்போன. இந்நிலையில் இத்திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை (8-ஆம் தேதி) காணொலி காட்சி மூலமாக துவக்கி வைக்க இனிதே நடைமுறைக்கு கொண்டு வரப் படுகிறது. மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு பிரசாதம் அளிக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு பொது மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவில் வட்டாரங்கள் தெரிவிக்கையில்., தற்போது கோவில் பிரசாத அங்காடியில் 60கி எடை கொண்ட லட்சு விற்பனை செய்யப்படுகிறது. இதில் 30கி லட்டு இனி பக்தர்களுக்கு இலவசமாக அளிக்கப்படவுள்ளது என தெரிவிக்கின்றனர்.
கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி., கோவிலில் நடை திறந்தது முதல் இரவு நடை மூடும் வரை பக்தர்களுக்கு இலவசமாக லட்டு அளிக்கப்படும் என தெரிகிறது. கோவில் வரும் அனைவருக்கும் பிரசாதம் அளிக்கப்படும் எனவும், திருவிழா காலங்கள் உள்பட அனைத்து நாட்களிலும் பிரசாதம் அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இதற்கான செலவினத்தை கோவில் நிதியில் இருந்து செலவிடப்படும் எனவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்ற.