திமுக தலைவராக பதவியேற்று இரண்டாவது நாளாக இன்றும் தமிழக அரசையும், மத்திய அரசையும் இரண்டாவது முறையாக தாக்கி பேசியுள்ளார் மு.க. ஸ்டாலின்.
நூற்றாண்டு கடந்து வந்து, பல வெற்றிகளைக் குவித்துள்ள திராவிட இயக்கத்தின் பயணம் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. அந்த நெடும் பயணத்தில் உடனடி இலக்குகள் இரண்டு அவை:
ஒன்று, சுயமரியாதையை அடகு வைத்த முதுகெலும்பில்லாத - ஊழல் கறை படிந்த - அரசு கருவூலத்தைக் கொள்ளையடிப்பதற்காகவே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசை மக்கள் துணையுடன் விரட்டி அடிப்பது.
மற்றொன்று, சமூக நீதிக்குக் குழிவெட்டி, நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, மாநில உரிமைகளைப் பறித்து மதவெறியைத் திணித்து, இந்தியா முழுவதும் காவி வண்ணம் பூச நினைக்கும் மத்திய பா.ஜ.க. அரசை வீழ்த்திக் காட்டுவது.
இந்த இரண்டு உடனடி இலக்குகளும், இந்தியாவையும் தமிழ்நாட்டையும் நெருக்கும் பேராபத்திலிருந்து காக்கக்கூடிய பாதுகாப்பு வேலிகளாகும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள மதசார்பற்ற சக்திகளுடன் இணைந்து அந்தப் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதில் நாம் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
அதன் அடுத்த கட்டமாக, மாநில உரிமை என்ற பயிரை வளர்க்க வேண்டிய பெரும்பணி இருக்கிறது. அது நமக்கான பணி மட்டுமல்ல, பேரறிஞர் அண்ணாவின் இலட்சியமும் - தலைவர் கலைஞரின் கொள்கையுமான ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்பதை நிறைவேற்ற வேண்டிய கடமை. தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்பட்டதுபோல, அண்டை மாநிலங்களின் உரிமைகளும் நலன்களும் பறிபோகின்றன. இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த உரிமைக் குரல் ஒலிக்கிறது.
மத்தியில் ஆள்கின்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் எதேச்சதிகாரப் போக்கினால் இந்தியாவின் ஒருமைப்பாடு மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. 120 கோடி மக்களைக் கொண்ட நாட்டின் வலிமையைப் பலவீனப்படுத்தும் அனைத்து வேலைகளையும் சமூக பொருளதார கல்வி, மொழி, வாழ்வுரிமை உள்ளிட்ட பல தளங்களிலும் செய்து வருகிறது. இவற்றால் ஒவ்வொரு மாநிலத்திலும் வாழ்கின்ற அந்தந்த மொழி பேசும் தேசிய இனங்களின் மீது அறிவிக்கப்படாத போர் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த யுத்தத்தை எதிர்கொள்கின்ற ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து செல்வதில், மாநில சுயாட்சிக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதற்காக அயராது உழைக்கும் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் முன்னணியில் இருக்கும்.
சமூக நீதிக்கு எதிராகவும் மதவெறியுடனும் இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் வகையிலும் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசையும், சுயமரியாதை இழந்து மாநில உரிமைகளை அடமானம் வைத்த மாநில அ.தி.மு.க. அரசையும் வீழ்த்த வேண்டியது என்பது ஜனநாயக போர்க்களமான தேர்தல் களம் தான். நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் அடுத்தடுத்து வரலாம். ஏன், இரண்டும் இணைந்துகூட வரலாம்.
எப்படி வந்தாலும், எந்தத்தேர்தல் வந்தாலும் அதில் மக்கள் விரோத அரசுகள் இரண்டையும் வீழ்த்துவதே ஜனநாயக இயக்கமான தி.மு.க.வின் இலக்கு. கொள்கை ரீதியான தோழமை சக்திகள் நம்முடன் இணைந்து நிற்கின்றன. அதில் குழப்பம் ஏற்படுத்தலாமா என நினைத்து குறுக்குசால் ஓட்டிப் பார்க்க எவர் நினைத்தாலும் அவர்தம் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. நம் பயணம் உறுதியானது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று திமுக தலைவராக பதவியேற்ற பிறகு, அவர் கூறியதாவது, ‘ என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே’ என்று கூறி தன் உரையைத் தொடங்கினார். தி.மு.க-வை நெஞ்சில் சுமந்து முற்றிலும் புதிய எதிர்காலத்தை நோக்கி கட்சியையும் தமிழகத்தையும் அழைத்துச் செல்ல விரும்புகிறேன். தமிழகத்தை ஊழல் ஆட்சியில் இருந்து விடுவிப்பதே நமது முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும். இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும். முதுகெலும்பில்லாத இந்த மாநில அரசை தூக்கி எரிந்து அழகான எதிர்காலத்தை ஒன்றாக நாம் மெய்பிக்க வேண்டும்.
வாருங்கள் அனைவரும் சேர்ந்து செல்வோம். நானும் ஒரு தொண்டன்தான் இங்கு அனைவரும் சமம். என் உயிர் உள்ளவரை என் உயிரினும் மேலான தமிழினத்துக்காக உழைப்பேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.