வைரவிழா மடல்: கலைஞரை வாழ்த்திட வாரீர் - மு.க.ஸ்டாலின் அழைப்பு

Last Updated : May 30, 2017, 10:59 AM IST
வைரவிழா மடல்: கலைஞரை வாழ்த்திட வாரீர் - மு.க.ஸ்டாலின் அழைப்பு  title=

திமுக தலைவர் கலைஞரை வாழ்த்திட வைரவிழாவில் கலந்துகொள்ள அனைவருக்கும் வைரவிழா  மடல் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

இதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- 

தி.மு.கழகம் எனும் ஆலமரம் பேரறிஞர் அண்ணாவின் காலத்திற்குப் பிறகும் தழைத்து, செழித்து வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணமான நம் தலைவரின் உறுதிமிக்க நிலைப்பாடு, வைரத்தின் உறுதிக்கு எந்தளவிலும் குறைந்தவை அல்ல.

நூறாண்டு கடந்த திராவிட இயக்கத்தில் 80 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கிக் கொண்டிருக்கும் பெருமை கொண்டவர் நம் உயிரினும் மேலான அன்புத்தலைவர் கலைஞர் அவர்கள். ஏறத்தாழ 50 ஆண்டுகாலமாக தமிழக அரசியலின் ஆணி வேராக நிலைத்து, அச்சாணியாக செயல்படுபவர். இந்திய அரசியல் அரங்கில் பல குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றியவர். 

தேசிய அளவிலான அணிகளை அமைப்பதிலும், அவற்றுக்கான ஒருமித்த பொதுக்கொள்கைகளை வகுப்பதிலும் முன்னோடியாகத் திகழ்ந்து நாட்டின் நலனைக் காத்திட்டவர். தமிழகத்தில் நிலைப்பெற்றுள்ள திராவிட இயக்கத்தின் உயிர்மூச்சுக் கொள்கையான சமூகநீதிக் கொள்கையை இந்தியாவின் அனைத்துக் கட்சிகளும் ஏற்க வேண்டிய கொள்கையாக மாற்றிக் காட்டிய சாதனையாளர்.

ஓய்வறியா உழைப்பாளி, மண்ணில் உலவும் உதயசூரியன், சுயமரியாதையையும், பகுத்தறிவையும் அரசியல் களத்தில் விதைத்து, விளைத்து காத்து வரும் சொல்லேருழவர். தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் பயன் விளைவிக்கும் மகத்தானத் திட்டங்களை செயல்படுத்திய தலைசிறந்த ஆட்சி நிர்வாகி. கலைஞர் எனும் மாபெரும் தலைவரைத் தவிர்த்துவிட்டு எதிர்காலத்தில் எவராலும் தமிழகத்தின் வரலாற்றை எழுதிவிட முடியாது.

இத்தனைப் பெருமைகள் கொண்ட தலைவர் கலைஞர் அவர்களின் 94வது பிறந்தநாளில் கூடுதல் சிறப்பாக, சட்டமன்றப் பணிகளுக்கான வைரவிழா ஆண்டும் இணைந்து நம்மை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில், தமிழக வரலாற்றில் மட்டுமின்றி, இந்திய ஜனநாயக வரலாற்றிலும் சாதனை மிக்க தலைவராக கலைஞர் அவர்கள் இடம்பிடித்திருக்கிறார். எந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டாரோ அதனை செயல்படுத்தும் அரசியல் பேரியக்கத்தின் சார்பாகத் தொடர்ச்சியாகப் போட்டியிட்டு, அனைத்து தேர்தல் களங்களிலும் வெற்றியைத் தவிர வேறெதையும் அறியாதவர் தலைவர் கலைஞர்.

1957 ல் குளித்தலை தொகுதியில் தொடங்கியது அவரது வெற்றிப் பயணம். ஒரே கட்சி, ஒரே சின்னம், 13 முறை தேர்தல் களத்தில் போட்டி, அத்தனையிலும் வெற்றி, 5 முறை முதல்வராகப் பொறுப்பேற்று 18 ஆண்டுகள் அந்தப் பொறுப்பினில் சிறப்பாக செயல்பட்டு, தமிழகத்தில் அதிககாலம் முதல்வராகப் பணியாற்றியவர் என்ற பெருமையும் தலைவர் கலைஞர் அவர்களுக்கே உரியது. 

எதிர்த்தரப்பினரும் மறுக்க முடியாமல், தனது கொள்கை சார்ந்த திட்டங்களை ஏற்கும் வகையில், அவை நாகரிகத்துடன் கருத்துகளை எடுத்து வைப்பதில் தலைவர் கலைஞருக்கு நிகராக எவரையும் ஒப்பிடமுடியாது. எதையும் புள்ளிவிவரங்களுடனும், ஆதாரங்களுடனும் எடுத்து வைப்பது தலைவர் கலைஞர் அவர்களின் சிறப்பு. 

ஆளுங்கட்சியில் இருந்தால் எதிர்க்கட்சிக்கு உரிய நேரத்தை வழங்கி, பல நேரங்களில் ஆளுங்கட்சியினரை விட எதிர்க்கட்சியினருக்கு கூடுதல் நேரம் வழங்கி, அவர்களின் கருத்துகளை அனுமதித்து, அதன்பிறகு தன்னுடைய பதில்களை ஆணித்தரமான வாதங்களாலும், அசைக்கமுடியாத ஆதாரங்களாலும் முன்வைப்பார் என்பது தலைவர் கலைஞர் அவர்களின் சிறப்பு. எந்த ஒரு பதிலிலும் தன்னுடைய வாதத்திறமையை தனக்கேயுரிய நகைச்சுவை உணர்வுடன் தலைவர் கலைஞர் எடுத்துரைப்பார். 

இத்தகைய ஆளுமைத் திறன்மிக்க சொற்களால், தமிழகத்தின் நலனையும் வளர்ச்சியையும் பேணிப் பாதுகாத்த நம் தலைவர் அவர்களுக்கு சட்டமன்ற வைரவிழா கொண்டாடப்படுகிறது. ஆட்சிக்காலம் முழுவதும் அடுக்கடுக்கான திட்டங்களை நிறைவேற்றியவர் தலைவர் கலைஞர். அவற்றைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. 

எனினும், இந்தியாவுக்கே முன்னோடியாக சமூகநீதியைக் காப்பபாற்றும் வகையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தி, அதில் இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு, அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு என வழங்கியவர். தமிழகத்தில் சமூக நீதி தழைத்து, இன்றைக்கு 69% வரை இட ஒதுக்கீடு நிலைக்க அடித்தளம் அமைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டத்தை நிறைவேற்றியவர், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டமியற்றி, முறையான பயிற்சி அளித்தவர். குடிசை மாற்று வாரியத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாக்கி ஏழைகளை மாடிகளில் குடியேற்றியவர். பேருந்துகளை நாட்டுடைமையாக்கி அரசுடைமையாக்கியவர். 

கை ரிக் ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக் ஷாக்களைக் கொண்டு வந்தவர். ஏழை எளியோரும் உயர் சிகிச்சை பெறும் வகையில் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தந்தவர். சாதி சமய ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைய சமத்துவபுரங்களை உருவாக்கியவர். தொழிலாளர் தினமான மே நாளுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்தவர்.

மெட்ராஸ் என உச்சரித்த இந்திய உதடுகளை சென்னை என உச்சரிக்க வைத்தவர். மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லை அரசு வார்த்தையாக்கி, முதலமைச்சரின் அவர்களுக்கான திட்ட கண்காணிப்பை ஏற்படுத்தியவர். திருநங்கைகள் என மூன்றாம் பாலினருக்கு அங்கீகாரம் அளித்தவர். சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசின் திட்டங்களால் பயன் கிடைக்கச் செய்ததில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்தியவர் கலைஞர் அவர்கள். அதனால்தான் அவரது சட்டமன்ற வைரவிழாவுக்கு இந்தியத் திருநாடே திரண்டு வந்து, நமது ஆரூயிர்த் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான ஜூன் 3ந் தேதி சென்னைக்கு வருகிறார்கள்..

80 ஆண்டுகாலமாக தமிழ்ச் சமுதாயம் மேன்மையுற, ஓயாது உழைத்த தலைவர் அவர்கள், மருத்துவ காரணங்களுக்காக சிறிது ஓய்வெடுக்கும் நிலையில், அவரது இலட்சியங்களை நிறைவேற்ற நாம் தொடர்ந்து உழைப்பதே அவருக்கு நாம் வழங்கும் பிறந்தநாள் பரிசாக அமையமுடியும். மருத்துவர்கள் அனுமதித்தால், பிறந்தநாள் விழாவில் உங்களுடன் சேர்ந்து நானும் தலைவரின் முகம் பார்த்து, கரம் பற்றி, அவரின் வாழ்த்துகளைப் பெறுவதற்கு ஆவலாக இருக்கிறேன்.

எந்த நிலையிலும் தமிழகத்தின் நலனையும், தமிழரின் உயர்வையும், தமிழின் மேன்மையையுமே சிந்திக்கின்ற தலைவரின் மனமறிந்த உடன்பிறப்புகளான நாம், அவர் நல்லமுறையில் சிகிச்சையைத் தொடரும் சூழலிலும், தலைவருடைய பிறந்தநாளையும், அவரது சட்டமன்ற வைரவிழாவையும் 

இந்திய அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் விழாவாக்கி, தலைவர் கலைஞர் அவர்களுக்குப் பெருமை சேர்க்க உழைத்திடுவோம். ஜூன் 3 அன்று சென்னை மாநகரத்தில் திரண்டிடுவோம். தமிழகத் தலைநகர் கழகத் தொண்டர்களால் கறுப்பு - சிவப்பு கடலாகட்டும். இந்தியத் தலைநகர் வரை அதன் அலை வீசட்டும்.

இவ்வாறு மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Trending News