திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது!
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில நாட்களாக மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களும், செவிலியர்கள் குழுவும் அவரது கோபாலபுரம் இல்லம் சென்று அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அழகிரி, ராஜாத்தி அம்மாள், கனிமொழி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தடைந்தனர்.
இதனையடுத்து நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முன்னதாக கோபாலபுரம் இல்லத்தில் சூழ்ந்திருந்ந தொண்டர்களும், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்த தொண்டர்களும் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்தனர்.
காவேரி மருத்துவமனையின் 4-வது தளத்தில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி அவர்களுக்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கருணாநிதி அவர்கள் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் ஆபத்தான கட்டத்தை கடந்துவிட்டதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கருணாநிதி அவர்களுக்கு ரத்த அழுத்தத்தில் குறைபாடு இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாகவும், தீவிர சிகிச்சைக்குப் பின்னர் ரத்த அழுத்தம் சீராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.