கருணாநிதிக்கு இன்று 94-வது பிறந்தநாள்!!

Last Updated : Jun 3, 2017, 08:45 AM IST
கருணாநிதிக்கு இன்று 94-வது பிறந்தநாள்!! title=

திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். 

கடந்த 1924-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தார். இளம் வயது முதல் பொது வாழ்வில் அவர் ஈடுபட்டு வருகிறார். 

இன்று அவர் சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்து 60 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாகவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

வைரவிழா:-

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் வைரவிழா கொண்டாட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். 

தலைவர்கள் வாழ்த்து:-

கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசத் தலைவர் ஹமீத் அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், கேரள ஆளுநர் சதாசிவம் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விசிக தலைவர் தொல். திருமாவளவன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக் கூறியுள்ளனர். 

ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் அண்ணா, பெரியார் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தி தொண்டர்களிடம் வாழ்த்து பெறுவார். ஆனால் இந்தாண்டு உடல்நலக்குறைவு காரணமாக தொண்டர்கள் அவரை சந்திக்க நேரில் வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் வைரவிழா நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு திமுக தலைமைக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Trending News