பதிப்பும் படைப்பும் : இந்திய, உலகப் புத்தகச் சந்தைகளில் தமிழ் பதிப்புத் துறைக்கான இடம்

உலகலாவிய சந்தைப்படுத்துதல், பதிப்புத்துறை குறித்தான பல்வேறு புரிதல்களை குறித்துப் பேசும் பிரதி 'பதிப்பும் படைப்பும்'. இந்தப் பிரதி குறித்த பதிவுகளைப் பற்றிப் பார்ப்போம்.

Written by - முனைவர் பலராமன் சுப்புராஜ் | Edited by - Sudharsan G | Last Updated : Feb 14, 2023, 12:07 PM IST
  • பதிப்பும் படைப்பும் புத்தகத்தை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
  • 2022ஆம் ஆண்டு இப்புத்தகம் வெளியிடப்பட்டது.
  • காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன் இதை எழுதியுள்ளார்.
பதிப்பும் படைப்பும் : இந்திய, உலகப் புத்தகச் சந்தைகளில் தமிழ் பதிப்புத் துறைக்கான இடம் title=

தமிழ் வாசிப்புச் சூழலில் பொது வாசகன் ஒரு பிரதியை வாசிப்புக்கு உட்படுத்தி அதன் உள்ளடக்கத்தைப் பற்றிச் சிலாகிப்பார். அடுத்ததாகப் பிரதி குறித்த விவாதக் கூட்டத்தில் பேசுவதும், அதனை எழுத்தாக்கிப் மகிழ்வதையும் மேற்கொள்வார். மேலும் சம்பந்தப்பட்ட எழுத்தாளரைச் சந்தித்துப் பிரதியளித்த குதூகலத்தைப் பரவசத்துடன் வெளிப்படுத்துவார். கூடுதலாக அந்த எழுத்தாளனின் மெனக்கெடலை அறிந்துகொள்ள முயற்சி செய்வார். இப்படியான செயல்பாடுகளில் ஒரு பொது வாசகன் ஒரு பிரதியுடன் உச்சபட்சமாக ஊடாடுவதை வழக்கமாக்கிக் கொள்வது இயற்கையானது. ஆனால் அந்தப் பிரதியை அச்சிற்கு முன் அச்சிற்குப் பின் என்பதான பார்வையில் பார்ப்பது என்பது அரிதுதான். இதற்கான காரணிகளில் ஒன்று ஒரு பிரதியின் பதிப்புப் பணி சார்ந்தும் சந்தைப்படுத்துதல் சார்ந்தும் போதிய விழிப்புணர்வு இல்லை என்றே கூறலாம். இவை குறித்த விழிப்புணர்வையும் பார்வையையும் பதிப்பும் படைப்பும் பிரதியின் வாயிலாக அளித்திருக்கிறார் கண்ணன். 2022இல் காலச்சுவடு பதிப்பகம் வெளியிடப்பட்டுள்ள பதிப்பும் படைப்பும் பிரதி குறித்த பதிவுகளைப் பற்றிப் பார்ப்போம்.

கோவையில் ஒரு புத்தக எழுச்சி, தமிழின் செறிவுகளோடு ஒரு யாத்திரை, கொல்கத்தா புத்தகச் சந்தை, பாரீஸ் அனுபவம், தமிழ் நூல்களின் பயணம், தமிழகத்திலும் சாத்தியமா?, பத்மநாப ஐயரின் கொண்டை, காப்புரிமை : எழுத்தாளரின் அடிப்படை உரிமை, நூல் எரிக்கும் சுதந்திரம்!, தமிழ்ப் பதிப்புலகமும் உலகச் சூழலும், பிராங்பர்ட் புத்தகச் சந்தை: பதிப்புலகின் ஐ.நா.சபை, சூதும் தீதும் பிறர் தர வாரா அருந்ததி ராய் தமிழுக்கு வாராத காதை, புத்தகக் கண்காட்சிகள் : தமிழும் அயலும், வளர்ச்சி, உலக மொழிகளில் தமிழ்ப் படைப்புகள், வாசிப்பில் தோய்ந்த கனவுகள், நேர்கொண்ட எதிர்வினை, மாற்றுப் பதிப்பகம், இரண்டாம் வருகை, தமிழ்ப் பதிப்புத் துறையின் எதிர்காலம், காப்புரிமையின் புதிய பரிணாமங்கள், இருளில் சுடரொளி, பதிப்பு : புதிய அனுபவங்களும் புதிய வாய்ப்புகளும், நேர்காணல் : தமிழக அரசின் விருதைப் பற்றி நாம் பேசுவதே இல்லை! ஆகிய உள்ளடக்கத்தில் பேசுகிறது இந்தப் புத்தகம். கண்ணன் பதிப்புசார் பொருண்மையில் பல்வேறு சூழலில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து பதிப்பும் படைப்பும் பிரதியாக நமக்குத் தருவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | நோபல் பரிசு பெற்ற வெங்கி ராமகிருஷ்ணன் எழுதிய தமிழாக்க நூல் வெளியீடு

காலச்சுவடு தீவிர இதழில் இருந்து காலச்சுவடு பதிப்பகத்தைத் 1995இல் தொடங்கியவர் கண்ணன். இவர் தமிழ்ப் பதிப்புத் துறையில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வந்த அனுபவங்களை எழுத்தாக்கியுள்ளார் என்பது இப்பிரதியின் சிறப்பம்சமாகும். தமிழகத்தின் இந்தியாவின் கடைகோடியில் உள்ள (நாகர்கோவில்) உள்ள காலச்சுவடு பதிப்பகத்தைப் பதிப்புத்துறையின் மையத்திற்கு நகர்த்தியதின் பின்னணியில் பல்வேறு அவமானங்கள், இழப்புகள், எதிர்ப்புகள், தடைகள், அவப்பெயர்கள், போராட்டங்கள், முயற்சிகள் என்பவை இப்பிரதியில் இழையோடுகின்றன. தமிழ்ப் பதிப்புத்துறையை இந்திய அளவிலும் உலகலாவிய அளவிலும் எடுத்துச் சென்றவர்களில் கண்ணன் தவிர்க்க இயலாத ஆளுமையாகத் திகழ்வதைப் பறைசாற்றுகிறது பதிப்பும் படைப்பும். டெல்லி, கொல்கத்தா போன்ற இந்திய மாநிலங்களில் நடைபெறும் தேசிய புத்தகச் சந்தைகளிலும் பிராங்க்ஃபர்ட், இஸ்தான்புல், பாரிஸ், நோர்வே, ஷார்ஜா போன்ற பன்னாட்டுப் புத்தகச் சந்தைகளில் தமிழ்மொழிக்கான இருத்தலைக் காலச்சுவடு பதிப்பகம் மொழிப் பற்றுதலோடு முன்னெடுத்துள்ளது.

காலச்சுவடு பதிப்பகம் தமிழ்மொழி படைப்புகளை இந்திய மொழிகளிலும் உலக மொழிகளில் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் அயல்மொழி படைப்புகளைத் தமிழ்மொழிக்கு கொண்டு வரும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் மொழிபெயர்ப்பு துறையில் பிரெஞ்சு அரசு காலச்சுவடு பதிப்பகத்தின் செயல்பாட்டை அவதானித்து பிரெஞ்சின் உயரிய விருதுகளில் ஒன்றான செவாலியர் விருதைக் கண்ணனுக்கு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த பதிவில் எதார்த்தம் பளிச்சிடுவதைக் காணமுடிகிறது. 

தமிழ்ப் பதிப்புலகின் இன்றைய நிலையையும் தேவையையும் உலகலாவிய தன்மையின் பின்னணியில் உரையாடுகிறது இப்பிரதி. இந்தத் தொடர் உரையாடலில் ஆழமான தொலைநோக்குப் பார்வையுடனும் தமிழ்மொழிப் பற்றுதலுடன் ஆக்கப்பூர்வமான கருத்தாடல்களுடன் அடுத்த கட்ட நகர்வுக்கான தேடலுடன் முன்வைத்துப் பேசுவது பதிப்புத் துறையினருக்குப் பெரும் மனத்திறப்பை ஏற்படுத்தும். பதிப்புத் துறையில் இந்திய, உலகலாவிய செயல்பாடுகளில் காலச்சுவடு தன்னை விரித்துக்கொண்டு பயணித்த தடங்களையும் அடையாளப்படுத்துகிறது பதிப்பும் படைப்பும்.

உலகலாவிய சந்தைப்படுத்தலில் தமிழ் பதிப்புத்துறை எந்த அளவிற்குப் பின்தங்கி இருக்கிறது என்பதைப் பதிவு செய்கிறார். மேலும், தமிழ்ப் பதிப்புத் துறையை முன்னகர்த்த வேண்டும் என்பதையும் அதற்கான சாத்தியக்கூறுகளையும் எடுத்தியம்புகிறார் கண்ணன். அயலகப் புத்தகச் சந்தைகளில் தமிழ்மொழியை அறிமுகப்படுத்த வேண்டிய நிலைமையும் உள்ளது. ஆதலால், தமிழ் மொழியானது  திராவிட மொழிகளின் தாய் மொழி, உலகத்தில் உள்ள மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழி, உலகில் பல்வேறு நாடுகளில் தமிழ்மொழியைப் பேசும் மக்கள் உள்ளனர், தமிழ்மொழி தூணிலும் துரும்பிலும் இருக்கிறது எனப் பேசுபவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய பிரதியாக இது அமைகிறது.

தமிழ் எழுத்துலகிலும், பதிப்புத்துறையிலும் எழுத்தாளர்களிடம் காப்புரிமை பற்றிய போதிய விழிப்புணர்வு இன்மையால் அவர்களின் எழுத்துகளைப் பதிப்பகங்கள் சுரண்டுகின்றன. இப்போக்கை விமர்சனத்திற்கு உட்படுத்திக் காப்புரிமைப் பற்றித் தெளிவுபடுத்துவதால் எழுத்தாளர்களுக்குப் புதிய வாயிலைத் திறப்பதாக அமைகிறது. அருந்ததி ராயின் 'சின்ன விஷயங்களில் கடவுள்' தமிழ் வாசகர் பரப்பில் பெரும் பேசப்பட்ட பிரதி. அப்பிரதி மொழியாக்கத்தில் உள்ள சிக்கலை ஆதாரங்களுடன் பேசுவதன் மூலம் பதிப்பின் அறத்தை வெளிச்சமிட்டுக் காட்டுவதாக உள்ளது. தமிழ்நாட்டில் நடைபெறும் புத்தகக் காட்சியில் அரசியல்வாதிகளின் குறுக்கீட்டாலும், பபாசியின் பிற்போக்குத் தனத்தாலும் தேசிய, உலகப் புத்தகச் சந்தைப்படுத்தலில் போட்டியிட முடியாமல் பின்தங்கி உள்ளது என்பது கவனத்திற்குரியதாகும்.

தமிழ்ப் பதிப்பாளர்கள் தமிழ்நாட்டைக் கடந்து இந்திய அளவில் வர்த்தகத்தில் ஈடுபட முடியாமைக்கு மொழி தடையாக உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வைக்கிறது. பெரியாருக்கும் இராஜாஜிக்கும் இடையேயான உறவைச் சித்தரிக்கும் நூல் தமிழில் இல்லை என்ற வெற்றிடத்தைக் காட்டுகிறது. மேலும் எழுத்தாளன், எழுத்தாளனின் குடும்பத்திடம் பிரதி பதிப்பு தொடர்பாக உரிமம் பெறுவதிலும், மொழிபெயர்ப்பு உரிமம் பெறுவதிலும் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் குறிப்பிடத்தகுந்ததாக உள்ளது. 'கருத்து, செயல்பாட்டுச் சுதந்திரம் ஆகப்பரந்து விரிந்ததாக இருப்பதே ஒரு விவேகமான சமூகத்தின் அடையாளம். புத்தக எரிப்பு அத்தகையதொரு செயல்பாட்டுச் சுதந்திரம்தான்' என்று பதிவு செய்வதிலிருந்து காலச்சுவடின் நிலைப்பாட்டை உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.

நூலகத்தில் பெறப்படும் புத்தகங்களின் கொள்முதல், தரம், விலை போன்றவற்றை நெறிப்படுத்த தேவையான ஆலோசனையை வழங்குகிறது. மேலும் நூலகத்திற்காகவே செயல்படும் பதிப்பகங்களையும் விமர்சனத்திற்குட்படுத்துகிறது.இந்நிலையில், நூலகத்துறை நேர்கோட்டில் பயணிக்க வேண்டி அதற்கான முறைப்படுத்தலையும் சீர்திருத்தங்களையும் பற்றி உரையாடுகிறது பதிப்பும் படைப்பும்.
 
காலச்சுவடு எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிடவில்லை என்பதை இப்பிரதியை வாசிக்கும் வாசகர்கள் புரிந்துகொள்வார்கள். மேலும் காலச்சுவடானது பதிப்புத் துறையில் ஏற்பட்டுவரும் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தகவமைத்துக் கொண்ட ஒன்றாக வலம் வருகிறது. இதனூடே கண்ணனின் முதிர்ச்சித் தன்மையான அணுகுமுறையும் எதிர்கொள்ளலில் உள்ள பொறுமையும் துணைநிற்கின்றன என்பதைப் பதிப்பும் படைப்பும் வாசகர்களுக்கு உணர்த்திச் செல்லும்.  அனைத்து நிலை வாசகர்களுக்கும் புரியும்படியான எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டுள்ளது. பதிப்பும் படைப்பும் பிரதியை வாசித்த பின் காலச்சுவடு கண்ணன் மீதான மதிப்பீடு மாறும் என்பதே நிதர்சனம்.

மேலும் படிக்க | தோழிகளின் தின்பண்டங்கள்: இயற்கையோடு பயணிக்க வைக்கும் அந்த மூன்று தோழிகள்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News