Lok Sabha Election 2024: இந்தியாவின் தேர்தல் திருவிழா இன்று முதல் தொடங்கியிருக்கிறது எனலாம். மக்களவை தேர்தலுக்கான அட்டவணை, தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனால், பல்வேறு கட்டுப்பாடுகள் தேர்தல் கட்சிகளுக்கு விதிக்கப்படும், அதனை மீறும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அந்த வகையில், ஆள் பலம், பண பலம், வதந்திகள், தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஆகியவைதான் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அதன் தாக்கத்தை கட்டுப்படுத்துவதை இந்திய தேர்தல் ஆணையம் குறிக்கோளாக கொண்டுள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டின் தலைமை செயலகத்தில் இடம்பெற்றிருந்த முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படங்களை மறைக்கும் நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளன. கட்சி கொடிகள், சின்னங்கள் ஆகியவற்றையும் மறைக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் அமலான பின் மத்திய, மாநில அரசுகளால் புதிய திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியாது. புதிய அறிவிப்புகளை வெளியிட முடியாது. அனுமதி பெறாமல் கட்சி கொடி, பேனர்களை வீடுகளுக்கு முன் வைக்க முடியாது.
தமிழ்நாட்டில் மொத்தம் 39 மக்களவை தொகுதிகள் உள்ளன. புதுச்சேரியுடன் சேர்த்து 40 தொகுதிகள் எனலாம். அந்த வகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2024 மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறுவது கவனிக்கத்தக்கது. கடந்த 2019இல் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவின் போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடைபெற்றிருந்தது. தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவின் போதே தேர்தல் அறிவிக்கப்பட்டது குறித்து அரசியல் தலைவர்கள் தங்களின் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.
'இது ஜனநாயக படுகொலை'
குறிப்பாக, திமுகவின் மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி அவரது X பக்கத்தில் பகிர்ந்த பதிவில்,"பிரதமர் மோடிக்கு தேர்தல் தேதி முன்கூட்டியே தெரிந்து இருக்கிறது. அதனால் தான் முதற் கட்டம் தேர்தல் நடைபெற போகிற தமிழ்நாட்டில் பல்லடம், மதுரை, சென்னை, கன்னியாகுமரி, கோவை என தன் கட்சி பிரச்சார கூட்டங்களை முன்னரை நடத்தி உள்ளார்! இது அப்பட்டமான ஜனநாயக படுகொலை!" என பதிவிட்டிருந்தார்.
செல்வப்பெருந்தகை கருத்து
மேலும், தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் குறிக்கிறதா அல்லது மோடி சொல்லி குறிக்கப்படுகிறதா என சாமானியர்கள் கேள்வி எழுப்பிகின்றனர் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார். குறிப்பாக, பிரதமர் மோடியின் அடுத்தடுத்த தமிழ்நாடு பயணத்தை குறிவைத்தே எதிர்க்கட்சியினர் இந்த விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.
பிரதமரின் சமீபத்திய தமிழக சுற்றுப்பயணங்கள்
இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் தமிழ்நாட்டிற்கு பிரதமர் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் எனலாம். விமான நிலைய புதிய முனையம் உள்ளிட்ட பல திட்டங்களை தொடங்கிவைக்க பிரதமர் ஜன.2ஆம் தேதி திருச்சிக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். தொடர்ந்து, சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைக்க ஜன.19ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு அவர் வருகை தந்தார். அந்த சுற்றுப்பயணத்தில் ஜன 20, ஜன 21 ஆகிய தேதிகளில் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி ஆகிய இடங்களுக்கு சென்று அங்குள்ள கோயில்களில் வழிபாடு நடத்தினார். ஜன. 22ஆம் தேதி நடைபெற்ற அயோத்தி ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டைக்கு தமிழ்நாட்டில் இருந்துதான் ஜன.21ஆம் தேதி பிரதமர் மோடி புறப்பட்டார்.
அதன் பின், சுமார் ஒரு மாதம் கழித்து பிப்.27, 28 ஆகிய தேதிகளில் திருப்பூர் பல்லடம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மார்ச் 4ஆம் தேதி கல்பாக்கத்தில் ஈனுலை திட்டத்தை தொடங்கிவைத்த பிரதமர் மோடி அன்று சென்னை நந்தனத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார். நேற்றும் கன்னியாகுமரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். மேலும், வரும் மார்ச் 18ஆம் தேதி கோவையில் பாஜக சார்பில் பிரதமர் மோடியின் ரோட் ஷோ மற்றும் பொதுக்கூட்டம் ஆகியவையும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ