ஜெய் பீம் பட விவகாரத்தில் தங்கள் சமூகத்தை அவமதித்ததாகவும், சூர்யா பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாமகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தைத் திரையிட அனுமதிக்கக் கூடாது என பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாகக் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த விவகாரத்தில் திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருவதாகக் கூறியுள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், மிரட்டலுக்குக் கடும் கண்டனத்தையும் தெரிவித்தது. இச்சூழலில் பாமகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''திரைக்கலைஞர் சூர்யா உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள "எதற்கும் துணிந்தவன்" என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பாமகவைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள திரையரங்கு உரிமையாளர்களைச் சந்தித்து நடிகர் சூர்யா நடித்துள்ள இந்தப் படத்தைத் திரையிடக்கூடாது எனக் கடிதம் கொடுத்து மிரட்டி வருகின்றனர்.
நடிகர் சூர்யா ஜெய்பீம் என்ற சிறந்த திரைப்படத்தில் நடித்ததோடு அந்தப் படத்தையும் தயாரித்து வெளியிட்டிருந்தார். இந்தப் படம் வெளியானபோது பாமகவினர் பல்வேறு வகையான மிரட்டல்களை விடுத்தனர். எந்தவொரு தனிப்பட்ட பிரிவினரையும் இழிவுபடுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லையென படத்தின் இயக்குநர் தெளிவுபடுத்திவிட்டார். நடிகர் சூர்யாவும் உரிய விளக்கமளித்தார். ஆனாலும், சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை அவர் தொடர்புடைய எந்தத் திரைப்படத்தையும் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என பாமகவினர் மிரட்டுவது கலைச் சுதந்திரத்திற்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் எதிரானது. தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நோக்கமுடையது.
மேலும் படிக்க | தவறவிட்ட கமல்; கச்சிதமாகக் கையிலெடுத்த சூர்யா: எதற்கும் துணிந்தவன் படம் எப்படி?
ஜெய்பீம் திரைப்படக் கலைஞர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு விழா நடத்தி ஊக்குவித்தது. இத்தகைய திரைப்படங்கள் மென்மேலும் வரவேண்டியது காலத்தின் தேவையாகும். இந்நிலையில், சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செயலில் ஈடுபடுவதை பாமக நிறுத்திக் கொள்ள வேண்டும். பாமகவின் இச்செயலுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் வலுவாக கண்டனக் குரலெழுப்ப வேண்டும். மேலும் நடிகர் சூர்யாவின் திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாவதற்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | துரத்தும் 'ஜெய்பீம்' விவகாரம்; சூர்யா செய்யப்போவது என்ன?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR