Mother Language Day: 23-ஆவது உலக தாய்மொழி நாள் இன்று! தாய்த்தமிழைப் போற்றுவோம்

நாட்டின் ஒற்றுமைக்கு அந்நாட்டில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் உலக தாய்மொழி நாள் இன்று...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 21, 2022, 03:11 PM IST
  • உலக தாய்மொழி நாள் இன்று!
  • தாய்த்தமிழைப் போற்றுவோம்
  • தாய்மொழி அடிப்படையிலான பன்மொழிக் கல்வி
Mother Language Day: 23-ஆவது உலக தாய்மொழி நாள் இன்று! தாய்த்தமிழைப் போற்றுவோம் title=

தாய்மொழியின் பெருமையையும், ஒரு நாட்டின் ஒற்றுமைக்கு அந்நாட்டில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் உலக தாய்மொழி நாள் இன்று. 

23-ஆவது பன்னாட்டு தாய்மொழி நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலக தாய்மொழி தினத்துக்கான கருப்பொருள் ‘பன்மொழி கற்றலுக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்: சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’ என்று ஐ.நா அறிவித்துள்ளது.

கோவிட்-19 ஏற்படுத்தியுள்ள தாக்கஙக்ள், அதிலும் குறிப்பாக கல்வித் துறையில் தொலைதூரக் கல்விக்கு தொழில்நுட்பம் எவ்வளவு அவசியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. கல்வியில் உள்ள மிகப்பெரும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் தொழில்நுட்பத்திற்கு உள்ளது என்பதை ஐ.நா உணர்ந்துள்ளது.

எனவே, தாய்மொழி அடிப்படையிலான பன்மொழிக் கல்வி கல்வியில் சேர்க்கப்படுவது முக்கியம் என்பதை வலியுறுத்தும் வகையில்,  பன்மொழி கற்றலுக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்: சவால்கள் மற்றும் வாய்ப்புகள் என்ற கருப்பொருளை ஐநா வெளியிட்டுள்ளது.

தாய்மொழிக்காக ஒரு நாள் அனுசரிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது எப்படி என்ற பின்னணி வருத்தம் அளிப்பது. தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வி இன்னும் கானல்நீராகவே இருக்கும் நிலையில் தாய்மொழி தினத்தன்று அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.  

மேலும் படிக்க | தொல்காப்பியம் இந்தி மொழியில்! கன்னடத்தில் எட்டுத்தொகை பத்துப்பாட்டு

இந்திய விடுதலைக்கு முதல் நாள் பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்ட சமயத்தில், கிழக்கு வங்கமும் பாகிஸ்தான் நாட்டுடன் இணைக்கப்பட்டது. 

பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே வங்க மொழிக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. இந்த மொழிப் புறகணிப்பைக் கண்டித்தும், வங்க மொழிக்கு உரிய இடம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டன.

1952-ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 21-ஆம் நாளில் அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் நடந்த போராட்டத்தின் போது 5 மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

மேலும் படிக்க | உலகின் பழமையான தமிழ் மொழியின் ரசிகன் நான்: பிரதமர் மோடி

சலாம், பர்கட், ரபீக், ஜபார், ஷபியூர் என 5 மாணவர்களின் மொழிக்கான தியாகத்தை நினைவு கூறும் வகையில், அந்த நாளை உலக தாய்மொழி நாளாக யுனெஸ்கோ 1999-ஆம் ஆண்டில் அறிவித்தது.

தாய்மொழியின் பெருமைகளை மக்களுக்கு உணர்த்த உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்படுவது அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த நாள் அனுசரிக்கபப்டுகிறது.

வங்கமொழியைக் காக்கும் போராட்டத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர் என்றால், மொழிக்காக, தங்கள் தாய் மொழியைக் காப்பதற்காக, உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கானவர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.

மேலும் படிக்க | செம்மொழித் தமிழின் சிறப்புகள்

தாய்மொழி நாளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விடுத்துள்ள செய்தியில், உலகத் தாய்மொழி நாளில், தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். இன்று தாய்மொழி தினத்தன்று அவர் விடுத்துள்ள டிவிட்டர் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர்களது தியாகத்தில் இருந்து பெறும் உணர்வெழுச்சி கொண்டு, ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி - அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தாய்மொழி தினம் தொடர்பாக டிவிட்டர் பதிவிட்டிருக்கும் பாமகவின் அன்புமணி ராமதாஸ் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில், தமிழ் ஒரு கட்டாயப் பாடமாகக் கூட இல்லை என்கிற நிலையே இன்னும் நீடிப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. இந்த நிலையை மாற்றி, எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்கிற நிலையை உருவாக்க பன்னாட்டு தாய்மொழி நாளில் உறுதி ஏற்போம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க | பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News