1971-ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்!!
சென்னை: பெரியார் குறித்து தான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது, அந்த கருத்துக்கு உண்மைதான் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரிய பரபரப்பாகி உள்ளது. துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினி பெரியார் மற்றும் முரசொலி குறித்து பேசினார். அதில், சோ போன்ற பத்திரிக்கையாளர்கள் தற்போது அதிகம் வேண்டும். பத்திரிக்கை துறை தற்போது சரியாக இல்லை. முரசொலி வைத்திருந்தால் அவரை திமுககாரர் என்று சொல்லிவிடலாம்,கையில் துக்ளக் வைத்திருந்தால் அவரை அறிவாளி என்று சொல்லிவிடலாம்.
பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ. இந்துக்கடவுளுக்கு எதிராக பெரியார் பேரணி செய்தார். இந்து கடவுள்களை பெரியார் விமர்சித்ததை பற்றி யாருமே எழுதவில்லை. ஆனால் சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார். அப்போதைய முதல்வர் கருணாநிதி அதை கடுமையாக எதிர்த்தார்.இதனால் துக்ளக் பத்திரிக்கை நாடு முழுக்க பிரபலம் அடைந்தது, என்று ரஜினி குறிப்பிட்டார். இவரின் இந்த கருத்து மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது..... "துக்ளக் விழாவில் 1971 ஆம் ஆண்டில் சேலத்தில் நடந்த பேரணி குறித்து நான் பேசிய பேச்சு சர்ச்சையாக உள்ளது. இல்லாத ஒன்றை கற்பனையான விஷயத்தை நான் கூறவில்லை. கேள்விப்பட்டது மற்றும் அவுட்லுக் பத்திரிகையில் வந்ததைத்தான் கூறினேன்.
இதற்கு நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறார்கள். மன்னிக்கவும், நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்பதை தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன். நான் பார்த்ததை நான் சொல்கிறேன். அவர்கள் பார்த்ததை அவர்கள் கூறுகிறார்கள். இதை இனியும் பெரிதுபடுத்த கூடாது. இதை மறுக்க வேண்டிய சம்பவம் கிடையாது, மறக்க வேண்டிய சம்பவம் என செய்தியாளர்களிடம் கூறினார்.