தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வரலாற்றில் மிக அதிகம் பேர் எழுதும் இந்த தேர்வுக்காக, மாநிலம் முழுவதும் 6,962 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுத்துறையின் மிகப்பெரிய மேம்பாடாக, தேர்வர்களின் பெயர், புகைப்படம், பதிவெண், விருப்பப்பாடம் மற்றும் தேர்வுக்கூடத்தின் பெயர் ஆகிய தனிப்பட்ட விவரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ள தனித்துவ விடைத்தாள்கள் அறிமுகப்படுத்ததப்பட்டுள்ளன.
இதன் மூலம் தவறான பதிவெண்ணை குறிப்பிடும் தேர்வர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த மதிப்பெண் குறைப்பு நடவடிக்கை விடுவிக்கப்படுவதுடன், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான காலஅவகாசம் கணிசமாகக் குறையும் என டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுழைவுச் சீட்டில் தெரிவித்துள்ளபடி தேர்வர்கள் வினாத்தாளில் விடையினை குறித்தல் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வுத்தாளில் விடையளிக்காமல் விடப்பட்ட கட்டங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு குறிப்பிடும் வகையில் புதிதாக ஒரு காலம் சேர்க்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வுக்கூடங்களில் இருந்தும் தேர்வு நடவடிக்கைகளை அனைத்தையும் வீடியோ பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் தேர்வு தொடர்பான பணிகளில் ஈடுபடவுள்ளனர். தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் எளிதில் சென்றுவர வசதியாக கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறைக்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.