தனியாருக்கு தாரைவார்கப்படும் உருக்காலை -காங்., கண்டனம்!

மாநிலங்களவையில் தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஊழல்வாதிகளுக்கு ஏதுவாக RTI சட்டத்தை நீர்த்துப் போகச் செய்கிறது மத்திய அரசு என ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்!

Last Updated : Jul 27, 2019, 08:11 PM IST
தனியாருக்கு தாரைவார்கப்படும் உருக்காலை -காங்., கண்டனம்! title=

சேலம் உருக்காலையைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கண்டித்து வரும் 29-ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியத் தொழில் நிறுவனங்களில் பெருமைக்குரிய சேலம் உருக்காலையைத் தனியார் வசம் தாரை வார்க்க மத்திய பாஜக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதற்கு முன்னோடியாக அதன் பங்குகளை விலைக்கு வாங்க தனியார் நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு விருப்பக் கடிதங்களை இன்னும் இரு வாரங்களில் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழக மக்களிடையேயும், தொழிலாளர்களிடையேயும் மிகப்பெரிய எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

1960-களில் மக்களவையில் திமுக உறுப்பினர் ஈ.வெ.கி.சம்பத் சேலத்தில் உருக்காலை அமைத்திட கடுமையாக குரல் கொடுத்துப் போராடினார். காமராஜர் ஆட்சிக் காலத்தில் இதற்கான முயற்சிகளில் அன்று மத்திய அமைச்சர்களாக இருந்த சி.சுப்ரமணியம், மோகன் குமாரமங்கலம் ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது திட்டக் கமிஷன் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் இத்திட்டத்திற்காக தீவிர முயற்சி மேற்கொண்டார்.

இச்சூழலில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி விடுத்த கோரிக்கையை ஏற்று அன்று பிரதமராக இருந்த இந்திரா காந்தி 16.9.1970 அன்று சேலம் இரும்புத் தொழிற்சாலையை அமைப்பதற்கு சேலம் அருகில் உள்ள கருச்சிப்பட்டி என்ற இடத்தில் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் பிரதமர் இந்திரா காந்திக்கு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி தங்க மாங்கனி வழங்கி நன்றியை வெளிப்படுத்தினார்.

சேலம் இரும்பு ஆலையைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டாலும், 1981-ல் குளிர் உருட்டாலை உற்பத்தி செய்கிற நிலை ஏற்பட்டது. இதை அன்றைய மத்திய அமைச்சர் என்.டி. திவாரி திறந்து வைத்தார். இந்த திட்டம் சிறப்பாகச் செயல்படுவதற்கு மத்திய அமைச்சர்கள் வாழப்பாடி ராமமூர்த்தி, கே.வீ.தங்கபாலு ஆகியோர் பெருமுயற்சி எடுத்துக் கொண்டனர்.

இத்தகைய முயற்சிகளின் காரணமாக உருவாக்கப்பட்ட சேலம் உருக்காலைத் திட்டத்திற்கு இன்றைக்கு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டிருக்கிறது. நாட்டிலேயே உயர்தர எஃகு உற்பத்தி செய்யும் ஒரே பொதுத்துறை நிறுவனம் சேலம் உருக்காலை தான். மற்றவை தனியார் நிறுவனங்கள்.

சேலம் உருக்காலை, பன்னாட்டு நிறுவனமான ஜின்டால் குழுமத்திற்கு இணையான சந்தையைக் கொண்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாக நிதிப் பிரச்சினையில் சிக்கியிருப்பதால் அதைக் காரணமாக வைத்து மூன்று உருக்காலைகளைத் தனியாருக்குத் தாரை வார்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், இந்த நஷ்டத்திற்கும், நிதிப் பிரச்சினைக்கும் இந்திய உருக்கு ஆணைய நிர்வாகமே காரணம்.

ரயில் பெட்டிகளின் உட்கூரை முதல் தரைகள் வரையில் சேலம் உருக்காலையின் உற்பத்திப் பொருள்தான் பயன்படுத்தப்படுகிறது. மேலும், சந்திரயான் 2-க்குத் தேவையான துருப்பிடிக்காத எஃகு பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. இதனுடைய தரத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் பாராட்டியிருக்கிறார்கள். சேலம் உருக்காலை நாட்டின் 40 ஆண்டுகால சிறப்பான வரலாற்றைப் பெற்றிருக்கிறது.

சேலம் உருக்காலை இரண்டு முறை நவீனமயமாக்கப்பட்டது. தொடக்கத்தில் சேலத்தில் குளிர் உருட்டாலை தொடங்கப்பட்டது. இந்த குளிர் உருட்டாலைக்கு உதவும் வகையில் 1993 ஆம் ஆண்டு இரும்புச் சுருள்களை உற்பத்தி செய்யும் வெப்ப உருட்டாலை தொடங்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு எஃகு உருக்குப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. அடுத்த ஆண்டு 2011-ல் உற்பத்தி தொடங்கப்பட்டது. ஆலையில் உள்ள உருக்கு பிரிவு ஆசியாவிலேயே அதிவேகமாக உற்பத்தி செய்யும் பிரிவாக சாதனை புரிந்துள்ளது.

நவீன மயமாக்கப்பட்ட பிறகு உற்பத்தி மூலம் கிடைத்த வருவாய் முதலீட்டுக் கடனுக்கு வட்டியாக செலுத்தப்படுகிறது. நவீனமயமாக்கலின் கடைசிகட்டப் பணி 2010 -ம் ஆண்டு பூர்த்தியானது. அதற்காக ரூ.2,500 கோடி செலவிடப்பட்டது. அதில் ரூபாய் 1000 கோடியை சேலம் உருக்காலை நிறுவனமே முதலீடாக செலுத்தியது.

மீதமுள்ள தொகை ரூ.1500 கோடி பல்வேறு வகையில் கடனாக பெறப்பட்டது. அதற்கான வட்டி ஆண்டுக்கு ரூ.100 கோடி ஆகும். வட்டி மற்றும் தேய்மானம் ஆகியவற்றைக் கூட்டி நஷ்டமாக நிறுவனம் கணக்கிடுகிறது. இந்த அடிப்படையில் தான் சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்குகிறது என்று கூறி அதை விற்பது என்கிற முடிவில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது.

எந்த தொழில் திட்டத்திற்கும் உற்பத்தி காலம் இருக்கிறது. அதன்பிறகே உற்பத்தி பொருட்கள் சந்தைக்கு வரும். விற்பனை மூலம் வருவாய் கிடைக்கும். ஆனால், சேலம் உருக்காலை உற்பத்தி காலத்திலேயே இருக்கிறது. கடைசியாக முதலீடு செய்யப்பட்டது 2010-ம் ஆண்டு தான்.

அதில் உற்பத்தி 2011 -ம் ஆண்டு இறுதியில் தான் தொடங்கப்பட்டது. மூலதன கடனை ஈடு செய்வதற்கு ஆறு ஆண்டுகள் தான் ஆனது. ஆனால், வேறு சில நிறுவனங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் இருந்தாலும் ஆலைகளுக்கு மேலும் அவகாசத்தை மத்திய அரசு அளிக்கிறது.

உலகமயமாக்கலுக்குப் பிறகு அந்நிய முதலீட்டாளர்களுடன் உள்ளூர் நிறுவனங்கள் போட்டியிடுவதில் சிரமமான நிலை ஏற்பட்டது. துருபிடிக்காத எஃகு பொருட்களின் இறக்குமதி விலையில் குறைந்தபட்ச வரையறை என்று அரசு நிர்ணயிக்கவில்லை. அப்படி செய்திருந்தால் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்குப் பாதுகாப்பு ஏற்பட்டிருக்கும். இதன் விளைவாக கொரியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்துள்ளன.

கடந்த ஏழு ஆண்டுகளாக உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை. உள்ளூர் தேவைக்கு ஏற்ப உற்பத்தியிலும் மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை. முன்பெல்லாம் ரயில்வே பாகங்களின் தேவைக்கும், நாணய வில்லைகள் அச்சடிப்பதற்கும் சேலம் உருக்காலையின் உற்பத்திப் பொருட்களே பயன்படுத்தப்பட்டன. தற்போது, அப்படி பொருட்கள் வாங்கப்படுவது நிறுத்தப்பட்டு விட்டது. ஜிண்டால் குழுமம் போன்ற தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வது பொதுத்துறை நிறுவனங்களை மிகப்பெரிய அளவில் பாதித்துவிட்டது.

சேலம் உருக்காலையை, இந்திய உருக்காலை ஆணைய நிர்வாகம் மாற்றாந்தாய் மனப்பான்iமையுடன் நடத்துகிறது. சேலம் ஆலையைக் கடன் சுமையாகவே மத்திய அரசு கருதுகிறது. அது உண்மையல்ல. சேலம் உருக்காலை தனக்கென சந்தை பிரிவை அமைப்பதற்கு முன்பே ஆண்டுதோறும் 2 லட்சம் டன் விற்பனை செய்து வந்தது.

தற்போது சந்தை பிரிவு சேலம் ஆலையின் வசம் இல்லை. இது கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், இதுவரை விற்பனை செய்து வந்ததில் கால் பங்கு கூட விற்பனை செய்ய முடியவில்லை. இது ஆலையின் கழுத்தை நெறிக்கிற வேலையாகவே கருத வேண்டியுள்ளது. இந்த முடிவு சேலம் உருக்காலைத் திட்டத்தை முடக்குவதற்கு வழி செய்துள்ளது.

நஷ்டக் கணக்கு கூறும் நிர்வாகம், மூலதனத்திற்காக பெறப்பட்ட கடனுக்கான வட்டி, இதுவரை சேலம் உருக்காலை நிறுவனம் செலுத்திய தொகை, இன்னும் எவ்வளவு செலுத்தப்பட வேண்டும் என்ற விவரங்களை தொழிலாளர்கள் பலமுறை கோரியும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட விவரங்களுக்கு பதில் தர நிர்வாகம் மறுத்து வருகிறது.

மேலும், சேலம் உருக்காலை திட்டத்திற்கு விவசாயிகளிடமிருந்து 4 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதில் 2500 ஏக்கர் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இது சந்தையில் மிகப்பெரிய விலை மதிப்புள்ளதாகும். இது தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டால் நிலம் வழங்கிய விவசாயிகளின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும். இதில் 2000 தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

எனவே, லாபத்துடன் இயங்குவதற்கு நிறைய வாய்ப்புள்ள பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையை தனியாருக்குத் தாரை வார்ப்பது என்று மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதை எதிர்த்து சேலம் மாநகரில் வருகிற 29-ம் தேதி, திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத அறப்போராட்டத்தை சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடு செய்துள்ளன.

சேலம் மாநகரில் நடைபெற உள்ள இந்த மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் பெருந்திரளான பொதுமக்களும், காங்கிரஸ் கட்சியினரும் பங்கேற்று சேலம் உருக்காலை திட்டத்தை தனியாருக்குத் தாரை வார்க்கும் மத்திய பாஜ.க அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை முறியடிக்க ஆதரவு தர வேண்டும்", என கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.

Trending News