ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் முதல்முறையாக ஆஜரான ஓபிஎஸ்! இளவரசியிடமும் விசாரணை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். 

Written by - Dayana Rosilin | Last Updated : Mar 21, 2022, 11:50 AM IST
  • ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை
  • ஆறுமுகசாமி ஆணையத்தில் இளவரசி
  • முதல் முறையாக ஓபிஎஸ் ஆஜராகி விளக்கம்
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் முதல்முறையாக ஆஜரான ஓபிஎஸ்! இளவரசியிடமும் விசாரணை! title=

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் உயர்தர சிகிச்சைகளை வழங்கி வந்தனர். அது மட்டுமின்றி அவர் உடல்நிலை மீண்டு வர வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள அவருடைய தொண்டர்களும், பொதுமக்களும் பல்வேறுகட்ட பிரார்த்தனைகளை மேற்கொண்டனர். ஆனால், அனைவருக்கும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் அதே ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா காலமானார்.

தமிழகம் மட்டும் இன்றி இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும் கேள்வி எழுப்பத் தொடங்கினர். இதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள், அரசு உயர் அதிகாரிகள் என இதுவரை 154-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.

மேலும் படிக்க | Agriculture Budget 2022: வேளாண் பட்ஜெட் மீதான மக்களின் பொதுவான எதிர்பார்ப்புகள்

OPS Image

இதற்கு இடையே, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்களை விசாரிக்கும் போது மருத்துவக் குழு வல்லுநர்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எய்ம்ஸ் இயக்குநர் பரிந்துரையின்படி 6 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டு தற்போது மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

முன்னதாக அப்பல்லோ மருத்துவர்கள் 11 பேருக்கு ஆறுமுக சாமி ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்ட நிலையில், முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோரிடமும் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஆஜரான ஓபிஎஸிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு தகவல்களை சேகரித்துள்ளனர்.

Elavarasi

இதனை தொடர்ந்து,  சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ளார். அவருடன் அவரது மகன் விவேக்கும் வருகை தந்துள்ளார். 2 ஆண்டுகள் கழித்து ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்பிருப்பதாக எதிர் பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | மீண்டும் 1 மாத காலம் ஒத்திவைக்கப்பட்ட கொடநாடு வழக்கு -காரணம் என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News