மண்புழு போல் விவசாயிகளின் நண்பனாக நான் இருக்கிறேன்: EPS

திமுக தலைவர் ஸ்டாலின் கூறியது போன்று மண்புழுவாக தமிழக மக்களுக்கு உரமாக இருந்து சேவைகளை செய்யவே விரும்புவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!!

Last Updated : Mar 31, 2019, 07:51 PM IST
மண்புழு போல் விவசாயிகளின் நண்பனாக நான் இருக்கிறேன்: EPS title=

திமுக தலைவர் ஸ்டாலின் கூறியது போன்று மண்புழுவாக தமிழக மக்களுக்கு உரமாக இருந்து சேவைகளை செய்யவே விரும்புவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!!

நாடு முழுவதும் மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 97 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிக்களுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19 அன்று தொடங்கி 26 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் தங்களின் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் கூறியது போன்று மண்புழுவாக தமிழக மக்களுக்கு உரமாக இருந்து சேவைகளை செய்யவே விரும்புவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

கும்பகோணத்தில் அதிமுக வேட்பாளர் ஆசை மணியை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது; "தமிழக மக்களுக்கு எல்லாத் துறைகளிலுமே சிறந்த திட்டங்களை வழங்கியது அதிமுக அரசு மட்டுமே என தெரிவித்தார்.  திமுக ஆட்சி காலத்தில் இடம் வாங்கி வைத்து விட்டு வெளிநாட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தால் இடம் அவர்கள் பெயரில் இருக்காது. அப்படி இருந்த சூழ்நிலையை தடுக்க முதலமைச்சர் ஜெயலலிதா நில அபகரிப்பு சட்டத்தை கொண்டு வந்தார். அதிமுக ஆட்சியில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க முயற்சி செய்து காவேரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இதுபோல காவேரி மற்றும் கோதாவரி ஆறுகளை இணைக்கும் பாசனத் திட்டம் நிறைவேற்றுவதில் எங்களது இந்த அரசு உறுதியாக உள்ளது. அது முடித்தவுடன் டெல்டா மாவட்டங்கள் அனைத்தும் தண்ணீர் பிரச்சினை இல்லாமல் ஆண்டு முழுவதும் விவசாயிகள் விவசாயம் செய்ய வசதியாக இருக்கும் என கூறினார். 

திமுக தலைவர் ஸ்டாலின் தன்னை மண்புழு போன்று போவதாக கூறுகிறார், மண்புழு விவசாயிகளின் நண்பன் என்பதுகூட அவருக்குத் தெரியவில்லை. மண்புழு விவசாயிகளுக்கு நண்பன் மட்டுமல்லாமல் அது விவசாயத்துக்கு ஒரு இயற்கையான சத்து உரம் அதுபோல் தமிழக மக்களுக்கு உரமாக இருந்து சேவைகளை செய்யவே விரும்புகிறேன். ஒரு மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் விவசாயம் மட்டும் இருந்தால் போதாது, விவசாயத்தோடு சேர்ந்து பல நிறுவனங்களும் முதலீடு செய்தால் தான் நம் மாநிலம் சிறந்த வளர்ச்சி அடையும். ஆனால் போராட்டம் என்ற பெயரில் எந்த ஒரு நிறுவனம் வந்தாலும் எதிர்ப்பு தெரிவித்து அந்த நிறுவனங்களை தமிழ்நாட்டில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூப்பாடு போடுகிறார்.

இந்தியாவில் ஒரு தைரியமான சுயநலமில்லாத தேச நலனை கருத்தில் கொண்டு ஒரு உறுதியான பிரதமரை நாம் பெற்றுள்ளோம். அதே பிரதமர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். ஆகையால் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து நமது மயிலாடுதுறை பாராளுமன்ற வேட்பாளர் ஆசை மணி அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

 

Trending News