அண்ணாமலை நடைபயணம்... அமித் ஷா வந்தாலும் புறக்கணிக்கும் இபிஎஸ் - என்ன காரணம்?

Annamalai Rally Edappadi Palanisamy: ராமேஸ்வரத்தில் நாளை நடைபெறும் அண்ணாமலையின் நடைபயண தொடக்கவிழாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jul 27, 2023, 12:55 PM IST
  • அதிமுக தரப்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிப்பு.
  • இதில் ஓபிஎஸ் தரப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • அமித் ஷா கலந்துகொள்ள உள்ள நிலையில், விழாவை புறக்கணிப்பதாக அறிவிப்பு.
அண்ணாமலை நடைபயணம்... அமித் ஷா வந்தாலும் புறக்கணிக்கும் இபிஎஸ் - என்ன காரணம்? title=

Annamalai Rally Edappadi Palanisamy: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து நாளை (ஜூலை 28) நடைபயணத்தை தொடங்க இருக்கிறார். இந்த நடைபயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். மேலும், அண்ணாமலையின் இந்த நடைபயணத்திற்கு பாஜக மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

DMK Files Part 1 & 2

அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை அண்ணாமலையின் இந்த நடைபயணம் எழுப்பி உள்ளது. மேலும், இந்த நடைபயணத்தை முன்னிட்டு திமுக அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளின் சொத்து பட்டியலை (DMK Files Part 2) ஆளுநர் ஆர். என். ரவியை, அண்ணாமலை ஆளுநர் மாளிகையில் சந்தித்து வழங்கினார். ஏற்கெனவே, கடந்த ஏப். 14ஆம் தேதி அண்ணாமலை DMK Files முதல் பாகத்தை வெளியிட்டிருந்தார்.  

DMK Files எனப்படும் திமுக சார்ந்தவர்களின் சொத்து பட்டியலின் இரண்டு பாகங்களை முன்வைத்தும், அமலாக்கத்துறையின் வலையில் சிக்கியிருக்கும் செந்தில் பாலாஜி, பொன்முடி விவகாரம், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி விவகாரம் என பல பிரச்னைகளை அண்ணாமலை இந்த நடைபயணம் மூலம் களத்தில் மக்களுடன் பகிர்ந்துகொள்ள உள்ளார் என பாஜக தரப்பில் கூறப்படுகிறது. 

பிரதமரும் பங்கேற்கிறார்

இந்த நடைபயணம் நடைபெற்று வரும்போது, ஒரு முக்கிய இடத்தில் பிரதமர் மோடியும் இதில் கலந்துகொள்ள உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டன. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா என அனைவரின் கவனமும் அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலின் மீது பலமாக இருக்கிறது என கூறலாம். குறிப்பாக, பிரதமர் மோடி வரும் தேர்தலில் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் போட்டியிடலாம் என தகவல்களும் கூறப்பட்டு வருகின்றன. 

மேலும் படிக்க |  தி.மு.க. வாரிசு கட்சிதான்! ஆரியத்தை வீழ்த்த வந்த திராவிடத்தின் வாரிசுகள்!!

ஓபிஎஸ் தரப்புக்கும் அழைப்பு

இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டில் பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சியான அதிமுகவுக்கும் இந்த நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்துள்ள அதே வேளையில், அவரின் எதிர் தரப்பான முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் நடைபயணத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதான் அதிமுகவில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதிருப்தியில் இபிஎஸ்?

சமீபத்தில் டெல்லியில் நடந்துமுடிந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியின் கூட்டத்திலும் கூட பிரதமர் மோடிக்கு அருகில் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு, அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக கூறிவந்த சூழலில், ஓ. பன்னீர்செல்வத்திற்கும் பாஜக தரப்பில் அழைப்பு சென்றிருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. 

ஏற்கெனவே, அதிமுக - பாஜக (எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை) இடையே நீண்ட நாள்களாக விரிசல் ஏற்பட்ட நிலையில், சமீபத்தில் தான் அதன் சூடு தணிந்தது எனலாம். மேலும், அண்ணாமலையின் நடைபயணத்திற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு வந்தது பெரிய அளவில் பேசப்பட்டது. இதில், இபிஎஸ் கலந்துகொள்வாரா என்ற கேள்வியும் இருந்தது. 

புறக்கணிக்கும் இபிஎஸ்

அண்ணாமலையின் நடைபயணத்தில் பங்கேற்பதில் எடப்பாடி பழனிசாமி கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், ஓபிஎஸ் தரப்புக்கு வைக்கப்பட்ட அழைப்பு என்பது அந்த முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, அண்ணாமலையின் நடைபயண தொடங்கவிழாவில் இபிஎஸ் பங்கேற்காமால், அவர் சார்பில் அதிமுக முக்கிய நிர்வாகிகளை அனுப்பலாம் எனவும் கூறப்பட்டது. ஆனால், ஓபிஎஸ் பங்கேற்பதால் அதிமுக தரப்பில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

கூட்டணியில் சலசலப்பு?

கடந்த மாதம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை கூறிய கருத்து அதிமுக தொண்டர்கள், தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை உண்டாக்கிய நிலையில், அதுகுறித்து இருதரப்பிலும் எவ்வித சுமுகமான தீர்வும் எட்டப்படவில்லை என தெரிகிறது. அதை மனதில் கொண்டும் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலையின் நடைபயண தொடக்கவிழாவை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளார் எனவும் கருதப்படுகிறது. அமித் ஷா பங்கேற்க உள்ள இந்த விழாவை இபிஎஸ் புறக்கணிப்பது என்பது அதிமுக - பாஜக கூட்டணியில் பெரும் சலசலப்பை உண்டாக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க |  பாஜகவை வீழ்த்த ரெடியாகும் திமுக... இன்றே தேர்தல் பணியை தொடங்கிய ஸ்டாலின்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News