கரூர் மக்களவை தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்...
"ஆளும் கட்சி சார்பில் நிற்கும் வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். தம்பிதுரைக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் எவ்வாறு வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதை பார்த்திருப்பீர்கள். காரணம், தொகுதிக்கு எதுவும் செய்யாத பாராளுமன்ற உறுப்பினர் அவர். தான் தத்தெடுத்த கிராமத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் குறைபாடு.
நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது, அதனை விட்டுவிட்டு துணை சபாநாயகர் அந்தஸ்தில் இருப்பவர் தன்னையும், தன் குடும்பத்தையும், தனது தொழிலையும் வளப்படுத்தி கொள்வதற்கா பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை பயன்படுத்தி வருகின்றார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி கடந்த 40 ஆண்டுகளில் தமிழகத்திற்கு என்ன செய்ததுள்ளது. 2004-ஆம் ஆண்டு துவங்கி 2014-ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த போது நமதுஜீவாதார பிரச்சினையாகிய காவேரி பிரச்சினையில் கூட காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால் செல்போனில் பேசியே ராகுல் காந்தியிடம் எல்லா திட்டங்களையும் பெற்று தருவேன் என காங்கிரஸ் வேட்பாளர் சொல்கிறார். இது கேட்பதற்கு வேடிக்கையாக தான் உள்ளது.
ஒருவேலை அந்த காங்கிரஸ் வேட்பாளர் உங்கள் ஊருக்கு வாக்கு கேட்க வந்தால் அவரிடம், ‘ராகுல் காந்தியிடம் சொல்லி கர்நாடகாவில் காவேரி அணையின் குறுக்கே மேகதாது அணைகட்டுவதை நிறுத்த சொல்லுங்கள்’ என்று கேளுங்கள்.
தமிழக மக்களை எல்லாம் ஏமாற்றி வாக்கு வாங்கி வென்று விடலாம் என்று திட்டம் தீட்டும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஏமாறவேண்டாம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை தமிழகத்தை பாதிக்கின்ற, குறிப்பாக விவசாயத்தை பாதிக்கின்ற எந்தவொரு திட்டத்தையும் அனுமதிக்கவில்லை. நீதிமன்றத்தில் போராடித்தான் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான தீர்ப்பினை பெற்று தந்தார்.
அவரது மறைவிற்கு பிறகு கையாலாகாத பழனிசாமி அரசு, மோடி அரசுக்கு பயந்து ஆட்சி செய்துக்கொண்டு இருக்கிறது. பிரச்சனைகளுக்கு சரியான நடவடிக்கை எடுக்காததால் தமிழக மக்கள் தான் தற்போது பாதித்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்து வரும் தொல்லைகள் அனைவரும் அறிந்ததே. பழனிசாமி போலவோ, பன்னீர்செல்வம் போலவோ நாம் அவர்களுக்கு அடி பணியவில்லை, மண்டியிடவில்லை என்ற காரணத்தினால்தான் நமது இயக்கத்தை அழிக்க பார்க்கிறார்கள் எனவும் குறிப்பிட்டு பேசினார்.