எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு: பொதுச்செயலாளராக தொடர்கிறார் இபிஎஸ்

எடப்பாடி பழனிச்சாமிக்கு வெற்றி!! மேல் முறையீட்டு வழக்கில் உயர் நீதி மன்றம் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பை அளித்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 2, 2022, 11:31 AM IST
  • இபிஎஸ்-இடைக்கால பொதுச் செயலாளர் பதவி செல்லும்.
  • அதிமுக பொது குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமரவு உத்தரவிட்டுள்ளது
  • நீதிபதிகள் துரைசாமி, சுந்தரம்மோகன், அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு: பொதுச்செயலாளராக தொடர்கிறார் இபிஎஸ் title=

எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்காலிக நிம்மதி அளித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!! அஇஅதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் வழக்கு இன்று தீர்ப்புக்காக நீதி அரசர்கள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் முன்பாக தீர்ப்புக்காக பட்டியலிடப்பட்டது. இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்கள்.

அதிமுக  பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி அளித்த தீர்ப்பை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்குகளை நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு ஆகஸ்ட் 25 ம் தேதி  விசாரித்தது.

எடப்பாடி பழனிச்சாமி சார்பில்,  ஜூலை 11 பொதுக்குழுவுக்கு 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை, அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை, கட்சியினர் ஒற்றை தலைமை வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாக கூறியதற்கு எந்த புள்ளி விவரங்களும் இல்லை, ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது என வாதிடப்பட்டது.

ஜூன் 23 ம் தேதிக்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படாத நிலையில், அந்த நிவாரணத்தை தனி நீதிபதி வழங்கியது அசாதாரணமானது எனவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட  முன்வர மாட்டார்கள், தனி நீதிபதி உத்தரவு காரணமாக கட்சி நடவடிக்கைகள் ஸ்தம்பித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

உள்கட்சி விவகாரத்தில் தலையிடும் வகையிலும், வழக்கு கோரிக்கையை மீறி உள்ளதாலும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

பன்னீர்செல்வம் தரப்பில், அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என்றும், ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் இரு பதவிகளும் காலியாகவில்லை என முடிவுக்கு வந்து இரு பதவிகளும் நீடிப்பதாக கருதும் வகையில் ஜூன் 23க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், தலைமைக்கழகத்தின் பெயரில் தான் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதே தவிர, ஒருங்கிணைப்பாளரோ அல்லது இணை ஒருங்கிணைப்பாளரோ அல்ல எனவும் கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்பதால் ஜூலை 11 கூட்டத்துக்கு அனுப்பிய நோட்டீஸ் செல்லாதது எனவும் வாதிடப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்தலுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாவிட்டால் பதவிகள் காலியாகி விடும் என கட்சி விதிகளில் கூறப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் துரைசாமி,  சுந்தர் மோகன் இன்று  தீர்ப்பளித்தனர். அதில், பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

இதன் காரணமாக ஜூலை 11 பொதுக்குழு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது, பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டது செல்லும் என்ற நிலை உருவாகியுள்ளது.

மேலும் படிக்க | போதைப்பொருளை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: பொன்முடி குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை, செய்தியாளர்களை சந்தித்தார். பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல்களோடு சட்ட விதிப்படி பொதுக்குழு நடைபெற்று எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக பதவி ஏற்றது செல்லும் என உயர்நீதிமன்றம் தெரிவித்ததாக அவர் கூறினார். வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர் சந்திப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

- எடப்பாடி தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் செல்லும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது

 - ஒற்றை தலைமையின் நோக்கம் முன்னேற்பாடுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டுள்ளது

- பெருவாரியான பொதுக்குழு உறுப்பினர்களை எடப்பாடி வசமே உள்ளனர்.

- அண்ணா திமுக வின் சட்ட விதிகளின்படி இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.

- இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது சட்டப்படி செல்லும்.

- ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி அதிகப்படியான பொதுக்குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும்

- பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல்களோடு சட்ட விதிப்படி பொதுக்குழு நடைபெற்று எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக பதவி ஏற்றது செல்லும் என நீதிபதி தெரிவித்தார்.

மேலும் படிக்க | NCRB 2021: தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் அதிகரிப்பு; கடுமையான நடவடிக்கை தேவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News