காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி மத்திய நிபுணர் குழுவினர் இன்று தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
மத்திய நீர்வள ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையிலான இந்த நிபுணர் குழுவினர் கடந்த 7-ம் தேதி மற்றும் 8-ம் தேதிகளில் கர்நாடகத்தில் காவிரி பாசன பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து அணைகளை பார்வையிட்டனர். பிறகு நிபுணர் குழுவினர் நேற்று மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைகளை ஆய்வு செய்தனர். இதில் அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் அளவு, தற்போதைய நீர் இருப்பு உள்ளிட்டவை குறித்து தனது ஆய்வை மேற்கொண்டனர். இக்குழுவினர் மேட்டூரில் ஆய்வு செய்ய வந்த போது விவசாயிகள் மனு ஒன்றை அளித்தனர். அதில் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்க உயர்நிலைக் குழு வழிவகை செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளன,
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.எஸ்.ஜா, காவிரியில் உள்ள அணைகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னர்தான் தமிழகத்திற்கு தண்ணீர் தருவது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்க முடியும் எனக் கூறினார். இந்த நிலையில் ஜி.எஸ்.ஜா., தலைமையிலான குழு இரண்டாவது நாளான இன்று டெல்டா பகுதிகளில் தனது ஆய்வை மேற்கொள்கின்றனர்.தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 11 இடங்களில் இக்குழுவினர் இன்று ஆய்வு செய்ய உள்ளனர். இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை அக்டோபர் 17-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது.