கிழக்கு டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பதவிவிலக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமா வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி மத வெறியாட்டம், இஸ்லாமியர் படுகொலையை கண்டித்து புதுச்சேரியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றியபோது திருமா தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.
நிகழ்ச்சியிப் பேசிய அவர் மேலும் தெரிவிக்கையில்., சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் காரணமாக டெல்லியின் வடகிழக்கு பகுதியில் 4 நாட்களாக நடைப்பெற்ற கலவரத்தில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டை உலுக்கிய இந்த கலவரத்தில் கடைகள், கட்டிடங்கள், தனியார் பள்ளிகள் உள்ளிட்டவைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. காவல்துறையினரால் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்றும் அதனால், தான் கலவரம் 4 நாட்களாக தொடர்ந்தது என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் இருவரும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில்., தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.
மேலும் டெல்லி கலவரம் தொடர்பாக நீதீபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்பது தான் சங்க் பரிவார்களின் எண்ணம். அதன்படி தான் மத்திய அரசின் ஆட்சியும் நடந்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்கள் மட்டும் அல்ல, அனைவரும் பாதிக்கப்படுவார்கள். இது தெரியாமல் சிலர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். டெல்லியில் நடந்த வன்முறை பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தெரியாமல் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. வன்முறை சம்பவத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர்., டெல்லி காவல்துறை யூனியன் பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. வன்முறையில் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில் காவல்துறை வழக்குபதிவு செய்யவில்லை என்பதன் மூலம் அரசியல் தலையீடு இருப்பது உறுதியாகி உள்ளது என்று அவர் குற்றம்சாட்டினார்.