நாடு முழுவதும் 96 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டம் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிக்கும், 18 சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு தொடர்ந்து மாலை 6 மணி வரை நடைபெற்றது. இன்று வாக்குபதிவின் போது சில இடங்களில் வன்முறை சம்பமும் அரங்கேறியது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட கீழ்விஷாரத்தில் அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடியதால், கூட்டத்தை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் கூட்டம் ஓட்டம் பிடித்ததால், அப்போது ஒரு சிலர் காயமடைந்தனர். இந்த வாக்குசாவடியில் இரவு 8 மணி வரை வாக்குபதிவு நடைபெறுகிறது. அதேபோல மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற்று வருவதால், அந்த தொகுதிக்கும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மற்ற தொகுதிகளில் மாலை 6 மணியுடன் வாக்குபதிவு நிறைவடைந்தது.
இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ கூறியது, தமிழகத்தில் 6 மணி நிலவரப்படி மக்களவை தேர்தலில் 69.55% வாக்குப்பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக நாமக்கலில் 78 சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 57.05 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதேபோல தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.62% வாக்குப்பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக அரூரில் 86.96 சதவீதமும், குறைந்தபட்சம் சாத்தூரில் 60.87 சதவீதமும் பதிவாகிக என தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.