இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக காணலாம்..!
1. கர்நாடகத்தில் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகின்றன. இதன்மூலம் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா ஆட்சியின் எதிர்காலத் தலைவிதி நிர்ணயிக்கப்படுகிறது. இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது. பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக 6 இடங்களையாவது வெல்ல வேண்டும். குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியின்போது 17 எம்எல்ஏக்கள் அதிருப்தியில் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து அதில் 15 தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெற்றது.
2. ஜார்க்கண்ட் சட்டபேரவைக்கான இரண்டு கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 3 கட்டங்களிலும் முன்னிலை பெறுவதற்கு ஆளும் பாஜக தீவிரமாக பணியாற்றுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி பொகாரோ, பார்ஹி தொகுதிகளில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார். பாஜக சார்பில் பொகாரோவில் போட்டியிடும் விரன்ஜி நாராயணன், பார்ஹியில் போட்டியிடும் மனோஜ் யாதவுக்கு மோடி வாக்கு திரட்டுகிறார். இதைத்தொடர்ந்து மற்றொரு பொதுக்கூட்டத்திலும் பிரதமர் உரையாற்றுகிறார். முன்னதாக நவம்பர் 25ஆம் தேதியும், டிசம்பர் 3ஆம் தேதியும் வாக்குப்பதிவு
நடைபெற்றது.
3. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமீதி ஷா இன்று அறிமுகம் செய்கிறார். இதில் பாகிஸிதான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மதப்பாகுபாடு காரணமாக வஞ்சிக்கப்பட்டு இந்தியாவில் தஞ்சமடைந்த முஸ்லிம்கள் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை அளிப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மசோதாவை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என பாஜக உறுதி பூண்டுள்ளது. இதற்காக இன்றிலிருந்து 11ஆம் தேதி வரை அனைத்து பாஜக எம்பிக்களும் மக்களவையில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
4. மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கடுமையாக எதிர்ப்பதற்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் சோனியாவின் இல்லத்தில் நடைபெற்ற எம்பிக்கள் கூட்டத்தில் இந்த மசாதோவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதென முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்துக்குப் பின் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த மசோதா, அரசியலமைப்புக்கும் மதச்சார்பின்மைக்கும் விரோதமாக இருக்கிறதென்றும் அதை காங்கிரஸ் வன்மையாக எதிர்க்கும் என்று கூறினார்.
5. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கப்போவதாக சிவசேனை அறிவித்துள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடுமையான எதிர்ப்பைக் காட்டிவரும் நிலையில் சிவசேனையின் அறிவிப்பு திருப்பத்தை தந்துள்ளது.
காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரத்தில் பதவியேற்றுள்ள சிவசேனை தனது பழைய கூட்டாளிக்கு இதன்மூலம் விஸுவாசத்தைக் காட்டியுள்ளது. முன்னதாக, மும்பையில் நடைபெற்ற சிவசேனை கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் தலைமையேற்று பேசிய அக்கட்சித் தலைவர் உத்தவ்தாக்கரே இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில்
கட்சி எம்பிக்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என உத்தரவிட்டார். கட்சியின் நிலைப்பாட்டை அதன் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத்தும் உறுதி செய்துள்ளார்.
6. ஹைதராபாத் என்கவுன்ட்டர் சம்பவத்தால் தெலங்கானா காவல்துறைக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக மும்பை வழக்கறிஞர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
இந்நிலையில், என்கவுன்ட்டர் தொடர்பாக தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையும் இன்று நடைபெறுகிறது. இந்த வழக்கு தீர்ப்பு வெளியான பின்னர்தான் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் உடல் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது. மெகபூப்நகர் அரசு மருத்துவமனையில் அவர்களது உடலை பாதுகாக்கும்படி நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
7. பிகாரின் முஸாபர்பூரில் அதிர்ச்சிதரும் மற்றொரு பாலியல் பயங்கரம் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒருதலைபட்சக் காதலை ஏற்றுக் கொள்ளாத இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று உயிரோடு எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின்போது அந்தப் பெண் தனது ஆசைக்கு இணங்காததால் ஆத்திரமடைந்த இளைஞர் தனது வீட்டின் மேல் தளத்துக்கு கொண்டு சென்று உயிரோடு எரித்துள்ளார். பலத்த தீக்காயங்களுடன் போராடிக் கொண்டிருந்த இளம்பெண் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்குப்போராடி
வருகிறார்.
இந்நிலையில், அந்த கொடூர இளைஞர் கடந்த 3 மாதங்களாக இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர். இதுபற்றி பல முறை போலீஸாரிடம் புகார் செய்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது அந்தப்பெண்ணை கொளுத்தியதைத் தொடர்ந்து இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
8. தில்லி தானியச்சந்தையில் நிகழந்த பயங்கரத் தீ விபத்தில் 43 பேர் பலியான கட்டடத்தின் உரிமையாளர் ரேஹான், மேலாளர் பர்ஹான் ஆகியோரை கைது செய்துள்ள போலீஸார் இன்று அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். அவர்கள் மீது ஐபிசி 304, 308 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தீ விபத்து நடந்த கட்டடத்துக்கு தீயணைப்புத்துறையிடமிருந்து தடையில்லா சான்று வாங்கப்படவில்லை என்றும் அங்கு தீயணைப்புக்கருவிகள் எதுவும் பொருத்தப்படவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜான்சி ராணி ரோடில் உள்ள இந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீயில்சிக்கி 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்வழக்கு தில்லி குற்றப்பிரிவு போலீஸாரிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது.
9. மகாராஷ்டிரத்தில் புதிதாக அமைந்துள்ள மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசில் அமைச்சரவைகளை பகிர்ந்து கொள்வதற்கான முக்கியக் கூட்டம் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில், உள்துறையை சிவசேனை வைத்துக் கொள்ள விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில் சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். துறைகளை பிரித்துக் கொள்வதுடன் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் குறித்தும் அப்போது முடிவு செய்யப்பட உள்ளது. ஏற்கெனவே பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கும் இதுவரை துறைகள்
ஒதுக்கப்படவில்லை.
10. வெங்காய விலையேற்றத்துக்காக பிரதமர் மோடியை பழிப்பதை விட்டுவிட்டு இளைஞர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என யோகக்கலை பயிற்சியாளர் பாபா ராமதேவ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், இதற்காக நாம் யாரையும் சார்ந்திருக்க முடியாது. வெங்காய உற்பத்தியில் பிரதமர் மோடி ஈடுபட முடியாது. நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் பகவத் கீதையை பாராயணம் செய்தால் இதுபோன்ற செயல்கள் நடைபெறாது என்று கூறினார்.
11. தில்லியில் மாணவர் சங்க பேனரை ஏந்தியபடி குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி செல்லப்போவதாக ஜேஎன்யு மாணவர்கள் அறிவித்துள்ளனர். விடுதிக்கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் பலர் தேர்வுகளையும் புறக்கணித்தனர். கட்டண உயர்வு திரும்பப்பெறப்படும்வரை
தங்களது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று நடைபெறும் பேரணிக்கு ஜேஎன்யு ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
12. தமிழகத்தின் கோவையில், மூன்றாம் பாலினர் மசோதா 2019-க்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான மூன்றாம் பாலினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்த மசோதா உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், திருநங்கைகள் மற்றும் அரவாணிகள் மீது இழைக்கப்படும் குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்க வகை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதனிடையே, இந்த மசோதாவில், மூன்றாம் பாலினரின் நலனை உறுதிசெய்வதற்காக, சமூக அங்கீகாரம், கல்வி உரிமை, வேலைவாய்ப்பு, உடல்நலம் மற்றும் குடியிருப்பு உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
13. ஜார்க்கண்ட்டில் சட்டப்பேரவைக்கான மூன்றாம்கட்டத் தேர்தல் பிரசாரம் களை கட்டுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று 2 பிரசாரப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார். ஹசாரிபாக் தொகுதியின் பர்காகாவில் பகல் பனிரெண்டரை மணிக்கும், மதியம் 2 மணிக்கு ராஞ்சியிலும் அவர் தேர்தல் உரையாற்றுகிறார். ஜார்க்கண்டில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மூன்றாம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நாளை முடிவடைகிறது. இதில் 17 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 12 ஆம் தேதியன்று நடைபெறுகிறது.