விம்பிள்டன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் செரீனா வில்லியம்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் சிமோனா ஹாலெப்.
விம்பிள்டன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று இங்கிலாந்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பை எதிர்கொண்டார்.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிமோனா ஹாலெப் அதிரடியாக ஆடினார். இதனால் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் செரீனா வில்லியம்சை எளிதில் வீழ்த்தி விம்பிள்டன் டென்னிஸில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் பெற்றார்.
ஆல் இங்கிலாந்து கிளப்பில் ஹாலெப் தனது முதல் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியதன் மூலம், செரீனா வில்லியம்ஸ் 24-வது கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை மீண்டும் இழந்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த செரீனா வில்லியம்ஸ், இதுவரை ஆஸ்திரேலிய ஓபனில் 7 முறையும், பிரெஞ்சு ஓபனில் 3 முறையும், விம்பிள்டனில் 7 முறையும், யுஎஸ் ஓபனில் 6 முறையும் என மொத்தம் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக 319 வாரங்கள் இருந்தவர் செரீனா.
இவருக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீராங்கனை மார்க்ரெட் ஸ்மித் கோர்ட் முன்னாள் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக திகழ்ந்தவர்.
ஆஸி. ஓபனில் 11 முறையும், பிரெஞ்சு ஓபனில் 5 முறையும், விம்பிள்டனில் 3 முறையும், யுஎஸ் ஓபனில் 5 முறையும் என மொத்தம் 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று நடைப்பெற்ற போட்டியில் வெற்றிப் பெற்று செரீனா வில்லியம்ஸ் மார்க்ரெட் ஸ்மித் சாதனையினை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய போட்டியில் செரீனா கண்ட தோல்வியின் மூலம் மார்க்ரெட் ஸ்மித் சாதனையினை சமன் செய்ய இயலாமல் போனது குறிப்பிடத்தக்கது.