ஒலிம்பிக்: ஜிம்னாஸ்டிக்ஸில் தீபா கர்மாகர் 4-வது இடம்

Last Updated : Aug 15, 2016, 01:36 PM IST
ஒலிம்பிக்: ஜிம்னாஸ்டிக்ஸில் தீபா கர்மாகர் 4-வது இடம் title=

ஒலிம்பிக்  வரலாற்றில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை பெற்றவர் தீபா கர்மாகர். 

ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்சில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்தார். அவர் பங்கேற்ற வால்ட் பிரிவு இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று இரவு நடந்தது. இதில் தீபா கர்மாகர்  மயிரிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டார். அவர் 15.066  புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை பிடித்தார். 0.15 புள்ளிகளில் அவர் பதக்க வாய்ப்பை இழந்தார்.

இதைக்குறித்து தீபா கர்மாகர் பேசுகையில்:- நான் 15.016 புள்ளிகள் பெற்றுள்ளேன். இது எனது மிகப் பெரிய ஸ்கோராகும். இதனால் மிகவும் திருப்தியாக இருக்கிறேன். பதக்கம் கிடைத்து இருந்தால் இதை விட சிறப்பாக இருந்து இருக்கும். எனது செயல்பாடு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பங்கேற்ற முதல் ஒலிம்பிக் இதுவாகும். மற்ற வீராங்கனைகள் அனுபவம் பெற்றவர்கள். எனவே எனக்கு வருத்தம் இல்லை. அடுத்த 4 ஆண்டுகளுக்கு பிறகு (2020) ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது இலக்காகும், என்று கூறியுள்ளார். 

வடகிழக்கு மாநிலமான திரிபுராவைச் சேர்ந்த தீபா கர்மாகர் 6 வயதில் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியை தொடங்கினார். ஜிம்னாஸ்டிக்ஸ் பந்தயத்திற்கு பொதுவாக கால் பாதம் உள்பக்கம் வளைந்து கூர்மையாக இருக்க வேண்டும். ஆனால் தட்டையான கால்பாதங்களை பெற்றிருந்த இவர் ஜிம்னாஸ்டிக்சில் ஜொலிக்க முடியாது என்று விமர்சித்தனர். ஆனால் தொடர்ந்து கடினமான பயிற்சிகளின் மூலம் கால் அமைப்பில் உள்ள பிரச்சினைகளை சமாளித்து விட்டார். தனது அறிமுக ஒலிம்பிக்கிலேயே அமர்க்களப்படுத்தி உள்ளார். 

 

 

 

Trending News