புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான கபில் தேவ் (Kapil Dev) வெள்ளிக்கிழமை காலை பெரும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் உடனடியாக டெல்லியில் உள்ள ஃபோர்டிஸ் எஸ்கார்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 61 வயதான புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் கபில் தேவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. அவர் இப்போது நிலையாக இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும், கபில் தேவின் உடல்நலம் குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் எதிர்பார்க்கப்படுகின்றன. ஏனெனில் அவரது குடும்ப உறுப்பினர்கள் இதைப் பற்றி இன்னும் எந்த ஒரு புதுப்பிப்பையும் கொடுக்கவில்லை.
1983 ஆம் ஆண்டு லார்ட்ஸில் (Lords) நடந்த உலகக் கோப்பை (World Cup) இறுதிப் போட்டியில் இந்தியா தனது முதல் உலகக் கோப்பையை வென்றது. வலிமைமிக்க மேற்கிந்தியத் தீவுகளை தோற்கடித்து, இந்தியா, உலக கிரிக்கெட் அரங்கில் தன் வலிமையைக் காட்டி முதன் முறையாக இந்த சாதனையை செய்தது. அந்த சாதனையை இந்தியா செய்ய ஒரு முக்கிய காரணமாக இருந்தவர் அணியின் கேப்டன் கபில் தேவ். இவர் அனைவராலும் ‘ஹரியானா ஹுரிகேன்’ என்று அன்பாக அழைக்கப்படுகிறார்.
கபில் தேவ், தற்போது நடந்துகொண்டிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2020) குறித்த தனது கருத்துகளை மிகவும் துடிப்புடன் வெளிப்படுத்தி வந்தார்.
முன்னதாக அவருக்கு நீரிழிவு தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளும் இருந்தன.
கபில் தேவிற்கு எற்பட்ட மாரடைப்பு பற்றிய செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் நல்லபடியாக குணமடைய ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அவர் அக்டோபர் 1, 1978 அன்று குவெட்டாவில் பாகிஸ்தானுக்கு (Pakistan) எதிராக முதன் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அவர் 131 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடியுள்ளார். 434 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 5,248 ரன்களையும் அவர் குவித்தார்.
ஆல்ரவுண்டரான கபில் தேவ், 225 ஒருநாள் போட்டிகளில் 3,783 ரன்கள் எடுத்து 253 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 1983 ஆம் ஆண்டில் அவர் இந்தியாவை முதல் உலகக் கோப்பை வெற்றியை நோக்கி வழி நடத்திச் சென்றார்.
கிரிக்கெட் வரலாற்றில் வெறும் 21 வயதில் 1000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இள வயது ஆல்ரவுண்டர் என்ற சாதனையை அவர் செய்தார். 1994 இல் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார். அவர் 1999 இல் அணியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
1980-ல் ரோமி பாட்டியாவுடன் திருமணம் செய்து கொண்ட கபில் தேவுக்கு அமியா என்ற மகள் உள்ளார். கபில் தேவ் செப்டம்பர் 24, 2008 அன்று இந்திய பிராந்திய இராணுவத்தின் கௌரவ லெப்டினன்ட் கர்னலாக நியமிக்கப்பட்டார்.
கபில் தேவின் வாழ்க்கை வரலாறும் பாலிவுட் திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது. '83’ என்ற தலைப்பில் இப்படத்தில் கபில் தேவாக ரன்வீர் சிங் (Ranveer Singh) நடிக்கிறார். ‘By God’s Decree’, ‘Cricket My Style’ மற்றும் ‘Straight from the Heart’ ஆகிய மூன்று சுயசரிதைகளை இவர் இயற்றியுள்ளார்.
புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான கபில் தேவ் விரைவில் குணமடைய வேண்டும் என ஜி மீடியா அவருக்கு பிரார்த்தனைகளையும் வாழ்த்துக்கலையும் தெரிவித்துக்கொள்கிறது.
ALSO READ: 2008 முதல் 2019 வரை சென்னை சூப்பர் கிங்ஸின் பயணம்! 2020-ல் எப்படி? ஒரு அலசல்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR